Monday, November 15, 2010

தாய்மை

    அருள்ஜோதி தனது வலக்கை விரல்நுனிகளைக் கன்னத்தில் வைத்து அழுத்திக் கொண்டாள். அந்தக் கன்னம் வீங்கிப் போயுமிருந்தது. பல் வலி மூன்று நாட்களாகத் தாங்கமுடியவில்லை. முன்பைப் போல ஏதாவது வருத்தமென்றால் விழுந்து படுத்துக் கிடக்கவாவது முடிகிறதா என்ன? விடிகாலையில்தான் எத்தனை வேலைகள். கிணற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வரவேண்டும். வீட்டை, முற்றத்தைக் கூட்டித் துப்புரவாக வைத்துக் கொள்ளவேண்டும். மூத்தவளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பத் தயார் செய்யவேண்டும். அதிலும் அந்தப் பிள்ளை சோம்பேறிப் பிள்ளை. மெதுவாக எழுப்பி எழுப்பிப் பார்த்தும் எழும்பாவிட்டால் கொஞ்சம் சத்தம் போட்டுத்தான் எழுப்பவேண்டியிருக்கும். விடுமுறை நாளென்றால் ஜோதி அவளைக் கொஞ்சம் அவள் பாட்டிலே தூங்கவிடுவாள். அவள் எழும்பித்தான் என்ன செய்ய? வளர்ந்த பிறகு இப்படித் தூங்கமுடியுமா? அதற்கு இளையவள்.. ஜோதி எழும்பும்போதே எழும்பிவிடுவாள். இப்பொழுதுதான் நடக்கத் தொடங்கியிருக்கும் வயது. அவளை இடுப்பில் வைத்துக் கொண்டு வீட்டு வேலைகளைச் செய்யமுடியுமா? பாலைக் கொடுத்து, கொஞ்சம் இறக்கிவிட்டால் அது ஓடிப் போய் எதையாவது இழுக்கத் தொடங்கும். ஒரு முறை இப்படித்தான். குழந்தையின் சத்தமே இல்லையே என்று தேடிப் பார்த்தால் அது வாசலுக்கருகில் படுத்திருந்த பூனையினருகில் உட்கார்ந்து அதன் வாலை வாயில் போட்டுச் சப்பிக் கொண்டிருந்தது. ஜோதி சத்தம் போட்டு ஓடி வந்து பூனையைத் துரத்திவிட்டு குழந்தையைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டாள். பயந்துபோனது சத்தமாக அழத் துவங்கியது. பூனையின் மென்மையான மயிர்களெல்லாம் அதன் வாய்க்குள் இருந்தது. அவள் பூனையைத் திட்டித் திட்டி, அவளது சுட்டுவிரலை அதன் வாய்க்குள் போட்டுத் தோண்டித் தோண்டி பூனையின் முடிகளை எடுத்துப் போட்டாள். அது இன்னும் கத்திக் கத்தி அழத் தொடங்கியது. முருகேசு இருந்திருந்தால் அவள்தான் நன்றாக ஏச்சு வாங்கிக் கட்டிக் கொண்டிருப்பாள்.

    குழந்தை சிணுங்கினாலே அவனுக்குப் பிடிக்காது. அவளிடம் வள்ளென்று எரிந்துவிழுவான். அவள் அவனுடன் ஒன்றுக்கொன்று பேசிக் கொண்டோ, சண்டைக்கோ போக மாட்டாள். பொறுத்துக் கொண்டு போய்விடுவாள். என்ன இருந்தாலும் குழந்தைகள் மேலுள்ள பாசத்தால்தானே இந்த மாதிரி நடந்துகொள்கிறான். அந்த மீனாளுடைய கணவன் போல குடித்துவிட்டு வந்து சண்டை பிடிக்கிறவனென்றால் கூடப் பரவாயில்லை. பதிலுக்குச் சண்டை போடலாம். இவன் தன் பாட்டில் காலையில் எழும்பி, சாயம் குடித்துவிட்டு, அவள் அவித்துக் கொடுப்பதைச் சுற்றி எடுத்துக் கொண்டு தோட்டத்துக்கு வேலைக்குப் போனால் பொழுது சாயும்போது வந்துவிடுவான். அதன்பிறகு குழந்தைகளோடு வயல் கிணற்றுக்குப் போய் குளித்துக் கொண்டு வந்தானானால், அவள் இரவைக்குச் சமைத்து முடிக்கும் வரை, விளக்கைப் பற்ற வைத்துக் கொண்டு பிள்ளைகளுடன் கதைத்துக் கொண்டிருப்பான். மகன் பாலன் அப்பாவிடம் ஏதாவது கதை சொல்லச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருப்பான். அவனையும் அடுத்தவருடம் பள்ளிக் கூடத்தில் சேர்க்க வேண்டும். மூத்தவளையும், இளையவளையும் போல இல்லை அவன். சரியான சாதுவான பையன். ஒரு தொந்தரவில்லை. வேலைகளும் சுத்தபத்தமாக இருக்கும். ஜோதியும் எப்பொழுதாவது பகல்வேளைகளில் அரிசி, பருப்பு, வெங்காயமென்று வாங்க சந்திக் கடைக்குப் போவதென்றால் தொட்டிலில் சின்னவளைக் கிடத்திவிட்டு மூத்தவளிடம் குழந்தையைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு அவனைத்தான் கூட்டிப் போவாள். அவனும் ஒரு தொந்தரவும் தராமல் அவளோடு கடைக்கு வந்து அவள் சாமான்கள் வாங்கிமுடியும்வரை பார்த்திருப்பான். அங்கு கண்ணாடிப் போத்தல்களில் விதவிதமாக இனிப்புப் பொருட்கள் நிறைந்திருக்கும். அதையே பார்த்துக் கொண்டிருப்பான். அவளுக்குப் பாவமாக இருக்கும். அவனுக்கும் மற்றப் பிள்ளைகளுக்கும் சேர்த்து அதில் வாங்கிக் கொள்வாள். அவனது பங்கை அவனிடம் உடனே கொடுத்துவிடுவாள். எனினும் அவன் உடனே சாப்பிட்டு விடுவானா என்ன? அப்படியே எடுத்துக் கொண்டு வந்து அக்கா, தங்கையுடன் உட்கார்ந்து யார் கூட நேரம் சாப்பிடுகிறார்களெனப் போட்டிபோட்டுக் கொண்டு ஒன்றாய்ச் சாப்பிடுவதில்தான் அவனுக்குத் திருப்தி.

    வர வர பல்வலி கூடிக் கொண்டே வருவது போல இருந்தது. 'பெரியாஸ்பத்திரியில் மருந்தெல்லாம் சும்மா கொடுக்கிறார்கள்... போய் மருந்து வாங்கு...ஒரே மருந்தில் வலி போய்விடும்' என்று பீலியில் தண்ணீர் எடுக்கப் போனபோது சுமனாதான் சொன்னாள். அவள் சொன்னால் சரியாகத்தானிருக்கும். அவள் பொய் சொல்லமாட்டாளென்று ஜோதிக்குத் தெரியும். அடுத்தது இந்த மாதிரி விஷயத்தில் பொய் சொல்லி அவளுக்கென்ன இலாபமா கிடைக்கப் போகிறது? அவள்தானே அயலில் இருக்கிறவள். அவசரத்துக்கு உடம்புக்கு முடியாமல் போனால், சின்னவளைத் தூக்கிக் கொண்டு பீலியடிக்குப் போயிருந்தால் அவள்தானே தண்ணீர் நிரம்பிய குடத்தை வீட்டுக்குக் கொண்டு வந்து தருகிறவள். பீலித் தண்ணீர் எப்பொழுதும் குளிர்ந்திருக்கும். அதனால் வாய் கொப்பளித்தபோதுதான் முதன்முதலாகக் கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு பல் வலிக்கிறதென்று முகத்தைச் சுழித்துக்கொண்டு அப்படியே குந்திவிட்டாள். அயலில் முளைத்திருந்த வல்லாரை இலைகளைக் கிள்ளிக் கொண்டிருந்த சுமனாதான் அருகில் வந்துபார்த்தாள். வாயைத் திறக்கச் சொல்லிப் பார்த்தாள். கடைவாய்ப்பல்லில் ஒரு ஓட்டை. 'அடியே ஜோதி..எவ்ளோ பெரிய ஓட்டை..வலிக்காம என்ன செய்யும்? இப்பவே போய் மருந்தெடடி' என்றாள். உடனே போய் மருந்தெடுக்க காசா, பணமா சேர்த்துவைத்திருக்கிறாள் ஜோதி? அடுத்து இந்தக் காட்டு ஊருக்குள் இருக்கும் நாட்டுவைத்தியர் கிழமைக்கு நான்கு நாட்கள்தான் கசாயம், குளிகை, எண்ணெய்யென்று கொடுப்பார். எல்லா வியாதிகளுக்கும் ஒரே மருந்து. அதற்கும் வெற்றிலையில் சுற்றி எவ்வளவாவது வைக்கவேண்டும். கோயிலிலென்றால் ஒரு சாமியார் இருக்கிறார். ஏதாவது தீன்பண்டம் செய்து எடுத்துக் கொண்டு, ஒரு கொத்துவேப்பிலையும் கொண்டுபோனால் தீன்பண்டத்தை வாங்கிக் கொண்டு அந்த வேப்பிலைக் கொத்தால் வலிக்கிற இடத்தில் தடவிக் கொடுப்பார். வலி குறைந்தது மாதிரி இருக்கும்.

    சுமனா நகரத்துக்குப் போகச் சொல்கிறாள். எம்மாம் பெரிய தூரம். அந்தக் கிராமத்திலிருந்து யாரும் முக்கிய தேவையில்லாமல் நகரத்துக்குப் போக மாட்டார்கள். நகரத்துக்குப் போவது அவ்வளவு லேசுப்பட்ட காரியமா? எவ்வளவு தூரம் நடக்க வேண்டியிருக்கிறது? போகும்போதென்றால் பரவாயில்லை. பள்ளமிறங்கும் வீதி. பத்துக் கிலோமீற்றரென்றாலும் நடந்துகொண்டே போகலாம். வரும்போதுதான் மேடு ஏறவேண்டும். அதுவும் தேயிலைத்தோட்டத்து வீதியில் நடக்கும்போது நிழலெங்கே இருக்கிறது? வெயிலில் காய்ந்து காய்ந்து மேலே ஏறி வீட்டுக்கு வந்துசேரும்போது உயிரே போய்விடுகிறது. நகரத்தில் காசு நிறையக் கொடுத்தால், குணமாக்கியனுப்பும் ஆஸ்பத்திரி கூட இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறாள். ஒரு முறை கங்காணியையா வீட்டு ஆச்சி, தோட்டத்தில் செருப்பில்லாமல் நடக்கும்போது கண்ணாடியோட்டுத் துண்டொன்றுக்கு காலைக் கிழித்துக் கொண்டு, இரத்தம் கொஞ்சம்நஞ்சமா போனது? தோட்டமே பதறிப் போனது கிழவி மயக்கம் போட்டதும். துரைதான் தனது காரில் ஏற்றி நகரத்துக்கு அனுப்பிவைத்தார். உயிரில்லாமல்தான் வீட்டுக்கு வரும் என்று தானே தோட்டமே பேசிக் கொண்டது? காயத்தில் பால் போல வெள்ளைப் பிடவையைச் சுற்றிக் கொண்டு ஆச்சி வந்து சேர்ந்தது. கங்காணி வீடு வரை கார் வந்து நின்றதும் ஆச்சி எதுவும் நடக்காத மாதிரி தானாகவே நொண்டி நொண்டி நடந்து வீட்டுக்குள் போனதுதானே அதிசயம். அதற்குப் பிறகும் ஆச்சி செருப்புப் போட்டுக் கொள்ளவில்லை எப்பொழுதும். அவர் மட்டுமல்ல தோட்டத்தில் யாருமே செருப்புப் போட்டுக் கொண்டு நடந்தால்தானே. அடுத்தது இந்தக் காடு மேடு பள்ளமெல்லாம் இந்தச் செருப்புப் போட்டுக் கொண்டு இலகுவாக நடக்க இயலுமா என்ன?

    இரவெல்லாம் பல்வலியில் முனகினாள். கராம்பு, பெருங்காயம் எதையெதையோ எடுத்து வலிக்கும் இடத்தில் வைத்து கடித்துக் கொண்டு தூங்க முயற்சித்தாள். நித்திரை வந்தால்தானே? காலை எழும்பிப் பார்க்கும்போது கன்னத்தில் ஒரு பக்கம் வீங்கியுமிருந்தது. சுமனா சொன்ன மாதிரி உடனேயே ஆஸ்பத்திரிக்குப் போய்விட முடியுமா என்ன? எவ்வளவு வேலை இருக்கிறது? குழந்தைகள் பிறக்கும் முன்பென்றால் அவளும் தோட்டத்துக்கு கொழுந்து பறிக்கப் போய்க் கொண்டிருந்தாள். குழந்தை பிறந்த பிறகு பிள்ளையைப் பார்த்துக் கொள்ள ஒருவருமில்லையென்று அவளை வேலைக்குப் போகவேண்டாமென்று சொல்லிவிட்டான் முருகேசு. தோட்டத்துக்குப் போகாவிட்டால் என்ன? வீட்டில் எவ்வளவு வேலையிருக்கிறது? அவளது வீடு இருப்பது வீதியோடு காட்டுக்குப் போகும் மலையுச்சியில். கடைச் சந்திக்கு, கிணற்றுக்கு, பீலிக்கென்று கீழே இறங்கினால் திரும்ப வீட்டுக்கு வர ஒரு பாட்டம் மூச்சிழுத்து இழுத்து மேலே ஏறிவர வேண்டும். தினமும் தண்ணீருக்காக மட்டும் எத்தனை முறை இறங்கி ஏற வேண்டியிருக்கிறது? குடிசை வீடென்றாலும், சாணி பூசிய தரையென்றாலும் கூட்டித் துப்புரவாக வைத்துக் கொண்டால்தானே மனிதன் சீவிக்கலாம்? அத்தோடு தினமும் குழந்தை அடிக்கடி நனைத்துக் கொள்ளும் துணிகளையெல்லாம் துவைத்துக் காய்த்து எடுக்கவேண்டும். அந்தக் குளிரில் வெந்நீர் காயவைத்து குழந்தையைக் குளிப்பாட்டும் நாளைக்கு இன்னும் வேலை கூடிப் போகும். உடம்பில் தண்ணீர் பட்டதும் விளையாடும் குழந்தை, தண்ணீரிலிருந்து எடுத்ததும் ஒரு பாட்டம் அழும். மூத்தவள் இருக்கும் போதெனில், தங்கையைத் தூக்கிவைத்துக் கொள்வாள்தான். ஆனாலும் ஏழுவயதுப் பிள்ளையிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டு அவளுக்கு ஒரு திருப்தியோடு வேலை செய்யமுடியாது.

    முருகேசு காலையில் கொல்லைக்குப் போய் கை, கால் கழுவிக் கொண்டு வந்ததுமே சுடச் சுடச் சாயமும், உள்ளங் கையில் சீனியும் கொடுத்துவிட வேண்டும். அவன் குடித்து முடிப்பதற்கிடையில் அடுப்பில் வெந்திருப்பதை அது கிழங்கோ, ரொட்டியோ எடுத்து, ஒரு சம்பல் அரைத்துச் சுற்றிக் கொடுத்துவிடுவாள். ஒன்றும் கொடுக்காவிட்டாலும் அவன் ஒன்றும் சொல்லமாட்டான். ஆனால் வேலைக்குப் போகும் கணவனுக்கு ஒன்றும் சமைத்துச் சுற்றிக் கொடுக்காமல் அனுப்புவது எப்படி? பட்டினியோடு வேலை செய்யமுடியுமா? வீட்டில் சமைக்க ஒன்றுமில்லாவிட்டால் பரவாயில்லை. அவன்தான் வாரக் கூலி கிடைத்ததுமே ஒரு பை நிறைய சமையலுக்குத் தேவையான எல்லாமும் வாங்கிவந்து விடுகிறானே. குறை சொல்ல முடியாது. கொஞ்சம் கூடப் பணம் கிடைத்தால், பிள்ளைகளுக்கு பிஸ்கட்டுக்களும் கொண்டுவந்து கொடுப்பான். காலையில் அவன் கிளம்பிப் போனதற்குப் பிறகுதான் அவள் சாயம் குடிப்பாள். அதையும் முழுதாகக் குடித்து முடிப்பதற்கிடையில் குழந்தை அழத் தொடங்கும். ஓடிப் போய் அதைத் தூக்கிக்கொண்டு பாயில் படுத்திருக்கும் மூத்தவளைத் தட்டித் தட்டி எழுப்புவாள். பிறகு அவளை கிணற்றடிக்கு அனுப்பிவிட்டு, குழந்தைக்குப் பால் கொடுப்பாள். ஒரு வழியாக அதைத் தூங்க வைத்துவிட்டு, மூத்தவளுக்கு உணவைக் கட்டிக் கொடுப்பாள். இரவில் தண்ணீரூற்றி வைத்த எஞ்சிய சோற்றை, வெங்காயம், மிளகாய், ஊறுகாய் சேர்த்துப் பிசைந்து அவளுக்கு ஊட்டிவிடுவாள். பிள்ளையைப் பசியில் அனுப்ப முடியுமா? எவ்வளவு தூரம் நடக்கவேண்டும்? அவள் நன்றாகப் படிப்பதாக ஒரு முறை அவளது ஆசிரியையும் சொல்லியிருக்கிறார். அப்படியிருக்க தூரத்தைக் காரணம் காட்டி அவளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பாமல் இருக்கமுடியுமா? பிள்ளைகளை எப்படியாவது படிப்பிக்க வைத்து உயர்ந்த ஒரு நிலைக்குக் கொண்டு வரவேண்டுமென்றுதான் முருகேசுவும் அடிக்கடி சொல்வான். படிக்காவிட்டாலும் இந்தத் தோட்டத்தில் வேலை கிடைப்பது பிரச்சினையில்லைத்தான். ஆனாலும் படிப்பால் கிடைக்கும் மதிப்பும் மரியாதையும் ஆயுள் முழுதும் தோட்டத்தில் கூலி வேலை செய்தாலும், கொழுந்து பறித்தாலும் கிடைத்துவிடுமா? அருள்ஜோதியின் சிறிய வயதில் இந்தத் தோட்டத்திலெங்கே பள்ளிக்கூடமொன்று இருந்தது? அதனால் ஒரு எழுத்துக் கூட அவளுக்குத் தெரியாது. முருகேசு பிறந்த தோட்டத்திலென்றால் ஐந்தாம் வகுப்பு வரை படிப்பிக்கக் கூடிய வைக்கோல் வேய்ந்த ஒரு சிறிய பள்ளிக் கூடம் இருந்தது. அதில் அவன் மூன்றாம் வகுப்பு வரை படித்திருக்கிறான். பிறகு அவனது அப்பா பாம்பு கொத்திச் செத்துப் போனதால், மாடு மேய்க்கவும், பால் கறந்து விற்கவுமே நேரம் சரியாக இருந்தது. அவனது அப்பாவைப் பாம்பு கொத்தியது கண்ணில். எவ்வளவு நாட்டுவைத்தியம் செய்தும் குணமாகவில்லை. பச்சிலை தேடி எத்தனை ஊருக்கு அலைந்திருப்பான் அந்தச் சிறுவயதில். கடைசியில் எதுவும் உதவவில்லை.

    அருள்ஜோதி தினமும் இரவைக்குத்தான் சோறு சமைப்பாள். இரவில் எஞ்சியதையோ, காலையில் அவித்ததையோ அவளும் பிள்ளைகளும் பகலைக்கும் வைத்துச் சாப்பிடுவார்கள். அவளென்றால் பசியிலும் இருந்துவிடுவாள். பிள்ளைகளைப் பட்டினி போடுவதெப்படி? அவள் வளர்ந்த காலத்தில்தான் உண்ண இல்லாமல், உடுக்க இல்லாமல் கஷ்டத்தோடு வளர்ந்தாள். பிள்ளைகளையும் அப்படி வளர்ப்பது எவ்வாறு? ஆனாலும் பகலைக்குச் சோறு சமைப்பதைக் காட்டிலும் இரவில் சமைத்தால்தானே கணவன் சூட்டோடு சூட்டாக ருசித்துச் சாப்பிடுவான்? உழைத்துக் களைத்து வரும் கணவனுக்கு ஆறிய சோற்றைக் கொடுப்பது எப்படி? ஆசையோடு அவன் வாங்கிவரும் கருவாடோ, நெத்தலியோ, ஆற்றுமீனோ உடனே சமைத்துக் கொடுத்தால்தானே அவளுக்கும் திருப்தி? இரவைக்குப் பாரமாக ஏதாவது வயிற்றில் விழுந்தால்தான் நன்றாக நித்திரை வரும்..உடலும் ஆரோக்கியமாக வளருமென்று அவளது அம்மா இருக்கும்வரை சொல்வாள். மூத்தவள் இவள் வயிற்றிலிருக்கும் போதல்லவா அம்மா கிணற்றுக்குப் போகக் கீழே இறங்கும்போது வழுக்கிவிழுந்து மண்டையை உடைத்துக் கொண்டாள்? உரல் மாதிரி இருந்த மனுஷி. குடம் உருண்டு போய் வீதியில் விழுந்து, ஆட்கள் கண்டு அவளை வீட்டுக்குத் தூக்கிவரும்போதே உயிர் போய்விட்டிருந்தது. இப்படி நடக்குமென்று யார் கண்டது? விஷயம் கேள்விப்பட்டு தோட்டத்தில் வேலையிலிருந்த இவளும், முருகேசுவும் குழந்தை வயிற்றிலிருக்கிறதென்றும் பாராமல் ஓட்டமாய் ஓடி வந்தார்கள். குழந்தை பிறந்ததுமே அம்மாவின் பெயரைத்தான் அவர்கள் அதற்கு வைத்தார்கள். ஆனாலும் அப் பிள்ளையின் மீது கோபம் வரும்போதெல்லாம் அம்மாவின் பெயரைச் சொல்லித் திட்டுவது எவ்வாறு? அதனால் அதை ராணி என்று செல்லப் பெயர் வைத்தும் கூப்பிடத் தொடங்கினார்கள். அருள்ஜோதிக்கு அடிக்கடி அம்மாவின் நினைவு வரும். உடலில் ஏதாவது வருத்தம் வரும்போது, சுவையாக ஏதாவது சாப்பிடும்போது, அம்மா நட்டு வளர்த்த முற்றத்துத் தென்னை மரத்தில் தேங்காய் பறிக்கும்போது, அம்மா விழுந்த இடத்தைக் காணும்போது என்றெல்லாம் ஒரு நாளைக்குப் பல தடவைகள் அம்மாவை நினைத்துப் பெருமூச்சு விட்டுக் கொள்வாள். கொல்லைப் புறத் தோட்டத்தில் கத்தரி, வெண்டி ,பாகலென்று அவள் நட்டிருக்கும் மரக்கறிச் செடிகளுக்குத் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றுவதிலும், களை பிடுங்குவதிலும், உரம் போடுவதிலுமே பின்னேரம் கழிந்துவிடும். இரண்டு மூன்று கிழமைக்கொரு முறை காய்களை ஆய்ந்து சந்திக் கடைக்குக் கொடுத்து செலவுப் புத்தகத்திலிருக்கும் கணக்கைக் குறைத்துக் கொள்வாள். வீட்டிலிருப்பதென்று சொல்லி சும்மா இருப்பதெப்படி?

    சுமனா சொன்னபடியே அருள்ஜோதி பெரியாஸ்பத்திரிக்கு வந்திருந்தாள். தனியாகத்தான் வந்தாள். சுமனாவையும் கூட்டி வந்திருக்கலாம். கூப்பிட்டால் வந்திருப்பாள்தான். ஆனால், அவளும் வந்தால் இளையவை இரண்டையும் யாரிடம் விட்டு வருவது?  கீழ் வீட்டு சுமனாவிடம் இரண்டு குழந்தைகளையும் ஒப்படைத்துவிட்டு பள்ளிக்கூடம் செல்லும் மூத்தவளோடு வீட்டைப் பூட்டிக் கொண்டு பாதைக்கு வரும்போதே நன்றாக விடிந்திருந்தது. அவள் இதற்குமுன்பும் ஓரிரு முறை பெரியாஸ்பத்திரிக்குப் போயிருக்கிறாள்தான். ஆனால் அது நோயாளி பார்க்கத்தான். இப்படி மருந்தெடுத்து வரப் போனதில்லை. அதிலும் ஒருமுறை முருகேசுவின் சித்தி மலேரியாக் காய்ச்சல் வந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட செய்தி கேள்விப்பட்டதுமே, சுவையாக சோறு சமைத்து, பார்சல் கட்டி எடுத்துக் கொண்டு அவள்தான் முருகேசுவுடன் ஆஸ்பத்திரிக்கு வந்தாள். நோயாளிக்குச் சோறு கொடுக்கவேண்டாமென்று தாதி சொன்னதும் அங்கிருந்த வேறொரு நோயாளிக்கு அப் பார்சலைக் கொடுத்துவிட்டாள் ஜோதி. ஆஸ்பத்திரியென்றால் நோயாளியை அங்கேயே தங்க வைத்துக் கொள்வார்களென்றே அவள் எண்ணியிருந்தாள். அப்படியில்லையென்றும் மருந்து கொடுத்து உடனே அனுப்பிவிடுவார்களென்றும் சந்திக் கடை லலிதா சொன்னபிறகு தானே இன்று இங்கு வரவே அவளுக்கு தைரியம் வந்தது? அதன் நாற்றம்தான் அவளால் தாங்கிக் கொள்ளமுடியாதது. ஆஸ்பத்திரிக்குப் போய்வந்தால் சேலையெல்லாம் கூட அந்த வாசனைதான். அதற்காக பழையதைக் கட்டிக் கொண்டு போகமுடியுமா? இருப்பதிலேயே நல்லதைத்தான் உடுத்திக் கொண்டு போக வேண்டும். நகரத்துக்குப் போவதென்றால் சும்மாவா? சின்னவள்தான் கையை நீட்டி நீட்டி அழுதாள். சுமனா அவளைத் தூக்கிக் கொண்டு கொல்லையில் கூண்டுக்குள் இருந்த கிளியைக் காட்டப் போனதும்தான் அருள்ஜோதியால் வீதிக்கு வரமுடிந்தது.

    பல் வலி தாங்கமுடியவில்லை. கைக்குட்டையைச் சுருட்டி கன்னத்தில் வைத்து அழுத்தியவாறுதான் ஆஸ்பத்திரிக்கு நடந்துவந்தாள். வந்து பார்த்தால் மருந்தெடுக்க கிட்ட நெருங்க முடியாதளவு சனம். விடிகாலையிலேயே வந்து நம்பர் எடுத்து எத்தனை பேர் காத்திருக்கிறார்கள்? அவளுக்குப் போன உடனேயே வைத்தியரை அணுக முடியுமா என்ன? வந்த உடனே அவளுக்கு நம்பர் எடுக்கவேண்டுமென்பது கூடத் தெரியாது. அருகிலிருந்த ஒரு பெண்தான் அவளை நம்பர் எடுக்கும்படி சொன்னாள். அவள் இரவே வந்து காத்திருந்து ஒருவாறு நம்பர் எடுத்துவிட்டாளாம். காலையில் ஒரு மணித்தியாலம் மட்டும்தான் நம்பர் வினியோகிப்பார்கள். யாருக்குத் தெரியும் இது? அருள்ஜோதி அந்த நேரத்தைத் தாண்டி வந்திருந்தாள். இப்பொழுது என்ன செய்வது? எல்லா நோயாளிகளுக்கும் மருந்து கொடுத்த பிறகு நேரமிருந்தால் வைத்தியர் நம்பர் இல்லாதவர்களையும் பார்ப்பாரென அதே பெண்தான் சொன்னாள். அவ்வளவு பாடுபட்டு வந்ததற்குக் கொஞ்சம் காத்திருந்தாவது பார்ப்போமென ஒரு மூலையில் நிலத்தில் குந்தினாள் அருள்ஜோதி. எத்தனை விதமான நோயாளிகள்? காயத்துக்கு மருந்து கட்டும் அறையிலிருந்து வரும் ஓலம் கேட்டுக் கொண்டிருக்க முடியாதது. அவளுக்கு அதையெல்லாம் கவனிக்க எங்கு நேரமிருக்கிறது. பல்லுக்குள் யாரோ ஊசியால் குத்திக் குத்தி எடுப்பது போல வலியெடுக்கும்போது, பக்கத்திலிருப்பவளுக்கு உயிரே போனாலும் தன்னால் திரும்பிப் பார்க்கமுடியாதென அவள் நினைத்துக் கொண்டாள். அவளுக்கு முன்னிருந்த வாங்கில் அமர்ந்திருந்த ஒருத்தியின் ஏழெட்டு மாதக் குழந்தை அருள்ஜோதியைப் பார்த்துச் சிரித்தது. அவள் கன்னத்தில் அழுத்திப் பிடித்திருந்த கைக்குட்டையை எடுத்து விரித்து அக் குழந்தையை நோக்கி அசைத்தாள். அது இன்னும் சிரித்தது. அருள்ஜோதியால் சிரிக்க முடியவில்லை. திரும்ப கன்னத்தில் கையை வைத்து அழுத்திக் கொண்டாள்.

    ஆஸ்பத்திரியின் வாடை இப்பொழுது பழகி விட்டிருந்தது. ஒவ்வொருவராக உள்ளே போய் வந்து கொண்டிருந்தாலும் சனம் குறைவதுபோல் தெரியவில்லை. ஒரு நாளைக்கு நூறு பேரைத்தான் வைத்தியர் பார்ப்பாரென அங்கு கதைத்துக் கொண்டார்கள். அவளைப் போல நம்பரில்லாமல் எத்தனை பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள்? அதிலும் பக்கத்தில் நிலத்தில் அமர்ந்திருக்கும் இந்தக் கைப்பிள்ளைக்காரியை முதலில் உள்ளே அனுப்பாமல் அவள் உள்ளே போவதெப்படி? நூற்றியோராவது ஆளாக அவள் போனாலும் வீட்டுக்குப் போய்ச் சேர அந்தியாகிவிடுமென அவளுக்குத் தோன்றியது. ஆனால் இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வந்ததற்கு இருந்து மருந்தெடுத்துக் கொண்டே போக வேண்டுமென்ற வைராக்கியமும் உள்ளுக்குள் எழாமலில்லை. பல் வலிக்கு மருந்தெடுக்கப் போகவேண்டுமென்று முருகேசிடம் சொன்னதுமே, குறை சொல்லக் கூடாது, சட்டையை எடுத்து அதன் பைக்குள் கைவிட்டு கொஞ்சம் பணத்தை எடுத்து நீட்டினான். பெரியாஸ்பத்திரியில் போய் வரிசையில் காக்க வேண்டாம் என்றும் காசு கொடுத்து ஒரு மருத்துவரைப் பார்த்து மருந்து எடுத்துக் கொண்டு வரும்படியும் சொன்னான்தான். ஆனாலும் இலவசமாகக் கிடைக்கும் மருந்துக்கு எதற்குக் காசு கொடுக்கவேண்டுமென்றும் அவளுக்குத் தோன்றியது. அந்தக் காசை எடுத்துக் கொண்டு வந்ததும் நல்லதாகப் போயிற்று. இங்கு மருந்தெடுக்க முடியாமல் போனால் அந்தத் தனியார் க்ளினிக்குக்குப் போய் மருந்தெடுத்துக் கொண்டு போகலாம். அவள் கன்னத்தில் கைக்குட்டையை வைத்து அழுத்தி வேதனையில் முனகுவதைக் கண்ட ஒரு தாதி அருகில் வந்தாள். இவள் பல்வலியென்றதும் பல் டாக்டர் புதன்கிழமை மட்டும்தான் வருவாரெனவும் புதன்கிழமை வந்து நம்பரெடுத்து அவரைப் பார்க்கும்படியும் சொல்லிவிட்டுச் சென்றாள். அதற்குப் பிறகும் அங்கு காத்துக் கொண்டிருப்பதில் அர்த்தமென்ன இருக்கிறது? அதிலும் கையில் காசிருக்கும்போது எதற்காக இங்கே காத்துக் கிடந்து நேரத்தை வீணாக்கவேண்டும்? அவள் எழும்பி வெளியே வந்தாள்.

    வெயில் சுட்டது. பசித்தது. காலையில் எதுவும் சாப்பிடாமல் கிளம்பிவந்தது. அருகிலிருந்த குழாயருகில் போய் வயிறு நிறையத் தண்ணீர் குடித்தாள். தண்ணீர் பட்டதும் வலி சற்றுக் குறைந்தது போலவும் இருந்தது. தனியார் கிளினிக் இருக்குமிடத்தை விசாரித்துக் கொண்டு அங்கே நடக்கத் தொடங்கினாள். கடுமையான வெயிலல்லவா இது? மயக்கம் வருவதுபோலவும் உணர்ந்தாள். அந்தக் கிளினிக் அதிக தூரமில்லை. பணம் கட்டி மருந்து எடுப்பதற்கும் சனம் நிறைந்திருப்பதைக் கண்டுதான் அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அங்கிருந்த வாங்கில் போய் உட்கார்ந்துகொண்டாள். வரிசைப்படி இந்தச் சனம் மருந்து எடுத்து முடித்து, அதன் பிறகு தனது முறை வருவதற்கு வெகுநேரமெடுக்குமெனத் தோன்றியது. பிள்ளை பள்ளிக்கூடத்திலிருந்து வந்துவிடும். பசியிலிருப்பாள். ஏதோ தீர்மானித்தவள் எழுந்து வெளியேயிறங்கி வீதிக்கு வந்தாள். கையிலிருந்த காசுக்கு பிள்ளைகளுக்கு பிஸ்கட்டும், மூத்தவளுக்கு பள்ளிக் கூடத்துக்குக் கொண்டு போக ப்ளாஸ்டிக் தண்ணீர்ப் போத்தலொன்றும் வாங்கினாள். இங்கு வெறுமனே உட்கார்ந்திருந்தால் அங்கு பிள்ளைகளை யார் பார்த்துக் கொள்வது? சுமனாவும் வீட்டில் சும்மாவா இருக்கிறாள்? அவளுக்குத் தையல் வேலைகள் ஆயிரமிருக்கும். சின்னவள் அவளைப் போட்டுப் பாடாய்ப் படுத்திக் கொண்டிருப்பாள். இந்தப் பல்வலிக்கு கசாயம் குடித்தாலோ, கோயிலுக்குப் போய் வேப்பிலை அடித்தாலோ சரியாகப் போய்விடும். ஒன்றுமில்லாவிட்டால் பெருங்காயம், கராம்புத் துண்டு வைத்துப் பார்க்கலாம்.

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

நன்றி

# ஞாயிறு வீரகேசரி 10.10.2010
# தடாகம்
# திண்ணை
# நவீன விருட்சம்
# தமிழ் எழுத்தாளர்கள்

Thursday, October 14, 2010

கானல்

        காற்றோடு கூடிய அடர்த்தியான சாரல் மழை ஊரையே ஈரலிப்புக்குள் வைத்திருந்தது. மேகக் கருமூட்டம் பகல் பொழுதையும் அந்திவேளையைப் போல இருட்டாக்கியிருந்தது. விடுமுறை நாளும் அதுவுமாய் இனி என்ன? உம்மா சமைத்து வைத்துள்ள சுவையான சாப்பாட்டினைச் சாப்பிட்டுவிட்டு அடிக்கும் குளிருக்கு ஏதுவாய்ப் போர்த்தித் தூங்கினால் சரி. வேறு வேலையெதுவும் இல்லை.

        ஒருமுறை வெளியே வந்து எட்டிப்பார்த்தேன். வீட்டுக்கு முன்னேயிருந்த வயல்காணி முழுதும் நீர் நிறைந்து வெள்ளக் காடாகியிருந்தது. நாளை கொக்குகளுக்கு நல்ல நண்டு வேட்டை இருக்கிறது என எண்ணிக் கொண்டேன். இந்தக்கிழமை போயா தினத்துக்கும் சேர்த்து மூன்று நாட்கள் விடுமுறை. மழை வெளியே எங்கும் இறங்கி நடமாட விடாது போலிருக்கிறது.

        "நானா உங்களுக்கு போன்'' தங்கை சமீனா கொண்டு வந்து நீட்டினாள்.

        " யாரு ? "

        " வஜீஹா மாமி ஊட்டுலீந்து "

        ஹாரிஸாக இருக்க வேண்டுமென நினைத்துக் கொண்டேன். அவன் என்னுடன் கூடப்படித்த நெருங்கிய சினேகிதர்களில் ஒருவன். கொழும்பில் வேலை செய்யும் அவனும் விடுமுறைக்காக வீட்டுக்கு வந்திருக்க வேண்டும். இந்த முறை அவன் வீட்டுக்கும் போய் வரவேண்டுமென்ற திட்டமிருந்தது எனக்குள். போன மாதம் கொழும்பில் விபத்தொன்றில் சிக்கி ஆஸ்பத்திரியில் நீண்ட நாட்கள் தங்கியிருந்து விட்டு வீட்டுக்கு வந்திருக்கிறான்.

        தொலைபேசி அழைப்பினை எடுத்தேன். மதீனா ராத்தா எடுத்திருந்தார். ஹாரிஸின் மூத்த ராத்தா. அவர்களது உம்மா என்னை அவசரமாகப் பார்க்கவேண்டும் எனச் சொன்னதாகச் சொன்னார். மழை விட்டவுடன் வீட்டுக்கு வருவதாகச் சொல்லி வைத்தேன்.மனதுக்குள் நிறையக் கேள்விகள் எழும்பி மறைந்தது. இப்படியான தொலைபேசி அழைப்புக்கள் வருவது எனக்கு இதுதான் முதல் தடவை. அதுவும் வஜீஹா மாமியிடமிருந்து. ஏதும் அவசரமில்லாமல், காரணமில்லாமல் கூப்பிட்டிருக்க மாட்டார்.

        மதியச்சாப்பாட்டினை மேசையில் பரத்திவிட்டு உம்மா சாப்பிட அழைத்தார். சாப்பிட்டு முடித்து வந்து பார்த்தும் மழை விடுவது போலத் தெரியவில்லை. ஹாரிஸின் வாப்பா அவனது சிறுவயதிலேயே இறந்துவிட்டார். அவனுக்கு மூத்ததாக இரண்டு ராத்தாமார். வாப்பாவின் பென்ஷனில்தான் அவர்களை அவன் உம்மா கஷ்டப்பட்டு வளர்த்தார். இப்பொழுது ஹாரிஸும் வேலைக்குப் போவதால் குடும்பக் கஷ்டம் சிறிதளவாவது குறைந்திருக்கவேண்டும்.

        அவன் வீடு ஊருக்குள் இருந்தது. நடந்து போவதென்றால் பத்து நிமிடங்களாவது எடுக்கும். சமீனாவிடம் குடையை வாங்கிக்கொண்டு நடக்கத் தொடங்கினேன். மண் வீதியெங்கும் சேற்று நீர் தேங்கி அழுக்காகியிருந்தது. நடக்க நடக்க பின் கால்களில் தெறித்தது. பேசாமல் சைக்கிளில் வந்திருக்கலாம்.

         சிவப்பு ரோசாவுக்கென ஹாரிஸ் வீட்டு முன் வாயிலில், பதியம் போடப்பட்டிருந்தது. வீதியோடு ஒட்டிய வேலிக்கென வளர்க்கப்பட்ட மரங்களுக்குள்ளிருந்து மல்லிகைக் கொடியொன்று எட்டிப் பார்த்தது. வீட்டு வாயிலில் கூரையிலிருந்து வடிந்த பீலித்தண்ணீரில் சேறு தெறித்திருந்த கால்களைக் கழுவிக்கொண்டு செருப்பைக்கழற்றி வைத்து விட்டுக் கதவைத் தட்டி "ஹாரிஸ் " என்றபடியே உள் நுழைந்தேன்.

        " வாங்கோ தம்பி. ஹாரிஸ் போஸ்ட் ஒபிஸுக்குப் போறனெண்டு சொல்லிட்டு இப்ப கொஞ்சத்துக்கு முந்தித்தான் போன..வருவான்.. நீங்க இரிங்கோ." சொன்னபடி உள்ளிருந்து வந்த மதீனா ராத்தாவின் பின்னால் வஜீஹா மாமியும் வந்தார்.

        "ஓஹ்..சரி..மெதுவா வரட்டும்..ஹாரிஸுக்கு இப்ப எப்படியென்? கால்ல பலத்த அடியெண்டு கேள்விப்பட்டேன். பார்க்க வர எனக்கு லீவு கிடைக்கல்ல. இப்ப நடக்கேலுமா? "..முன் விறாந்தையில் போடப்பட்டிருந்த கதிரையில் அமர்ந்துகொண்டேன்.

        அருகிலிருந்த கதிரையில் வஜீஹா மாமியும் அமர்ந்து கொண்டே..

        " ஓஹ்...நடக்க ஏலும். இப்ப சைக்கிள் மிதிச்சுக் கொண்டுதான் போஸ்ட் ஒபிஸ் போயிருக்கான். ஒரு மாசமா கொழும்பு ஹொஸ்பிடல்ல இருந்தான். நாங்க மூணு நாளைக்கொருக்காப் போய் பார்த்துட்டு வந்து கொண்டிருந்தம்...பெண்டேஜ் வெட்டினாப் பெறகு கூட்டிக்கொண்டு போகச் சொன்ன..போன கிழமைதான் கூட்டிக் கொண்டு வந்தம். கால்ல வீக்கம் இன்னும் இரிக்கு. வாற கெழமயிலிரிந்து வேலைக்குப் போப்போறான். சொல்றதொண்டும் கேக்குறானில்ல. அதுபத்திப் பேசுறதுக்குத்தான் உங்களக் கொஞ்சம் வரச் சொன்னன் மகன். மதீனா..தம்பிக்கு குடிக்க எதாச்சும் ஊத்திக்கொண்டு வாங்கோ" என்றார்.

        " ஐயோ..வாணம் மாமி..இப்பத்தான் நல்லாச் சாப்டுட்டு வந்தன்...ஹாரிஸால என்ன பிரச்சினை மாமி ? அஞ்சு நேரம் தொழுதுகொண்டு உங்கட பேச்சைக் கேட்டு வளர்ற பொடியன் தானே"

        " அதெல்லாம் முந்தி மகன். அவனுக்கு மூத்ததா ரெண்டு ராத்தாமார் இரிக்காங்க..கல்யாண வயசாகி மிச்சநாள். இவன் என்னடாண்டால் இருவத்தஞ்சு வயசிலேயே ஒரு பிள்ளையப் பழக்கமாக்கிக் கொண்டு வந்து அவனுக்கு கல்யாணம் செஞ்சு வைக்கச் சொல்றான். "

        வஜீஹா மாமி சொல்லிக் கொண்டிருக்கும் போதே மதீனா ராத்தா வீட்டு மரத்தில் காய்த்த பப்பாளிப் பழமொன்றை துண்டுகளாக வெட்டியெடுத்து ஒரு தட்டில் கொண்டுவந்து என் முன்னால் இருந்த சிறு மேசையில் வைத்து "எடுங்கோ தம்பி " என்றார்.

        " அதுவுமொரு சிங்களப்பிள்ள. ஹொஸ்பிடல்ல வச்சுப் பழக்கமாகியிரிக்கு. வீட்டுக்கு வந்த நாள்ல இரிந்து இவன் அடிக்கடி ஒரு நம்பருக்கு கோல் எடுத்துப் பேசிக் கொண்டிருக்கிறதப் பார்த்துட்டுக் கேட்டா இப்படிச் சொல்றான். ஏன்ட உசிர் இரிக்கிறவரைக்கும் இது போல ஒண்ட ஏன்ட ஊட்டுல செய்ய அனுமதிக்க மாட்டன். எங்கட பரம்பரயிலயே இப்படியொரு காரியத்த யாரும் செஞ்சில்ல இண்டைக்கு வரைக்கும். இவன் இப்படி ஏதாவது செஞ்சுக்கொண்டு வந்து நிண்டானெண்டால் இந்த ரெண்டு கொமர்களையும் நான் எப்படிக் கரை சேத்துறது மகன்? " சொல்லிக் கொண்டிருக்கும் போதே மாமிக்கு அழுகை வந்துவிட்டது. உடுத்திருந்த சாரி முந்தானையால் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

        கேட்டுக்கொண்டிருந்த மதீனா ராத்தாவின் முகமும் வாடிச் சோர்ந்திருந்தது. நான் பேச்சை மாற்ற விரும்பினேன்.
       
        " சின்ன ராத்தா எங்க? காணல்ல? " என்றேன்.

        " அவ தையல் கிளாஸுக்குப் போயிருக்கா. உம்மா சேர்ந்திருந்த சீட்டுக்காசு கிடைச்சு ஊட்டுக்கு ஒரு தையல் மெஷினும் வாங்கிட்டம்.. நானும் தைக்கிறன். அவள் பூப்போடவெல்லாம் பழகோணுமெண்டு சொல்லிக் கிளாஸுக்குப் போறாள். நல்லா சொல்லித் தாராங்களாம். நீங்க பழம் சாப்பிடுங்கோ தம்பி. "

        "மகன் ..அண்ட அசலுல யாருக்கும் தெரியாது. இவன்ட மாமாவுக்குக் கூடச் சொல்லல்ல. நீங்கதான் அவன்கிட்ட இது சம்பந்தமா பேசோணும்..நீங்க சொன்னாக் கேப்பான். நல்ல புத்தி சொல்லுங்கோ அவனுக்கு. அவன நம்பித்தான் நாங்க எல்லோரும் இரிக்கிறம் மகன். "

        " நீங்க கவலைப்பட வாணம் மாமி..நான் அவன்கிட்ட பேசுறேன். எல்லாம் சரியாகிடும்..நீங்க ஒண்டுக்கும் யோசிக்க வாணம்." என்று சொல்லியவாறே எழுந்தேன்.

        "ஹாரிஸ் வந்தானெண்டால் எங்கட ஊட்டுக்கு வரச்சொல்லுங்கோ..நான் இன்னும் ரெண்டு நாளைக்கு ஊட்டுலதான் இரிப்பன்..அவன் வராட்டி ராவாகி நானே வாறேன். போய்ட்டு வாறேன் மாமி "

        செருப்பை அணியும் போது மதீனா ராத்தா ஒரு கறுப்புப் பொலிதீன் பையைக் கொண்டு வந்து நீட்டினார்.

        "என்ன ராத்தா இது ? "
       
        " உம்மாக்கிட்டக் கொடுங்கோ..மிச்சம் நாளாச்சி அவங்களப் பார்த்து..நாங்க சலாம் சொன்ன எண்டு சொல்லுங்கோ "

        நான் சரியெனச் சொல்லி, கொடுத்த பப்பாளிப் பழங்களை வாங்கிக் கொண்டு குடையுடன் நகர்ந்தேன். மழை லேசான தூறலாகப் பின் தொடர்ந்தது.

        மஃரிபுக்குப் பள்ளிக்குப் போய்விட்டு வருகையில் என்னைத் தேடி வந்த ஹாரிஸ் என் வீட்டில் இருந்தான். அவன் குடித்து விட்டு வைத்திருந்த தேனீர்க் கோப்பையையும் எடுக்காமல் உம்மா அவனது விபத்து பற்றிய கதைகளைப் பரிதாபத்தோடு கேட்டுக்கொண்டிருந்தார். வாப்பா அவனது காலைக் காட்டச் சொல்லிப் பார்த்தார். நான் அவனை எனது அறைக்குள் கூட்டிக்கொண்டு வந்தேன். லேசாக நொண்டியபடியே நடந்துவந்தான். கட்டிலில் அமரச் சொல்லி விபத்து எப்படியானதென விசாரித்தேன்.

        "வேலைக்குப் போயிட்டு வரச்சதான்.. பஸ்ஸை நான் இறங்கும் முன்னமே இழுத்துட்டான்..கீழ விழுந்துட்டன்..சின்ன எலும்பு முறிவு..பெருசாக் கட்டுப்போட்டு உட்டுட்டாங்க..இன்னம் குளிசை தந்திரிக்கு..குடிக்கச் சொல்லி..."

        பிறகு அவனது வேலை பற்றியும், கொழும்பில் தங்குமிடம் பற்றியெல்லாம் விசாரித்துவிட்டு விஷயத்துக்கு வந்தேன்.

        " யாரோ ஒரு சிங்களப்புள்ளயொண்டோட பழக்கமாம் ? எப்போலிரிந்து டா? "

        " அது மச்சான்...யாரு உனக்குச் சொன்ன ?"

        " அத விடு..நீ சொல்லு...என்ன பழக்கம்? என்ன விஷயம்..? மறைக்காமச் சொல்லுடா "

        " அது தான் நான் எக்ஸிடண்ட் பட்டு ஹொஸ்பிடல்ல இருக்குறப்ப நல்ல அன்பாப் பார்த்துக் கொண்டது..நான் படுத்திருந்த வார்டுல வேல செய்ற நர்ஸொண்டு.."

        " நீ அவள லவ் பண்றியாம்..கல்யாணம் செய்யப்போறியாம் ? "

        " என் மேல ரொம்ப அன்பு அவளுக்கு..அவ மேல எனக்கும் விருப்பமொண்டிரிக்கு..நானின்னும் அவக்கிட்ட அதச் சொல்லல்ல..ஆனா நான் சொன்னா மறுக்க மாட்டாளெண்டு எனக்கு நல்லாத் தெரியும் "

        " உனக்குப் பைத்தியமாடா மச்சான் ? உனக்கு ரெண்டு ராத்தாமார் இரிக்காங்க..உன்ன நம்பி உன்னோட குடும்பம் இரிக்கு..நீ இப்படிச் செஞ்சா ஊருல யாரு உன் குடும்பத்த மனுஷனா மதிப்பாங்க ? "

        " ம்ம்..எக்ஸிடண்ட் பட்டுத் தன்னந்தனியா ஹொஸ்பிடல்ல இரிக்கிறப்போ ஊருலிரிந்து எவன் வந்தான் என்னப் பார்க்க? அந்தப் புள்ளதான் பார்த்துக் கொண்டது. கல்யாணமெண்டொண்டு கட்டினா அவளைத்தான் கட்டுவேன்..நீதான் மச்சான் ஹெல்ப் பண்ணனும் " என்று என் கைகளைப் பிடித்துக் கொண்டான். அவனிடம் இதற்கு மேல் இது பற்றிப் பேசுவதில் அர்த்தமில்லை எனத் தோன்றியது. அந்தப் பெண்ணிடம் பேசிப் பார்த்தால் என்ன ?

        " அவளுக்கு விருப்பமா இந்த லவ்வுல ? "

        " நான் இன்னும் வெளிப்படையா அவக்கிட்டச் சொல்லல..நேத்தும் கோல் எடுத்தேன்..ஒரு ஜாதிக் குளிசையை மறந்து வச்சிட்டுப் போயிட்டனெண்டு மறக்காம பார்மஸில வாங்கிக் குடிக்கச் சொன்னா.."

        " அவக்கிட்டக் கேட்காம நீ கல்யாணம் வரைக்கும் கற்பன பண்ணி வச்சிரிக்க "

        " இல்ல மச்சான்..அவள் கட்டாயம் ஏத்துக் கொள்வாளென்ற நம்பிக்கை எனக்கிரிக்கு. நீதான் மச்சான் எனக்கு ஹெல்ப் பண்ணனும். எங்கட ஊட்டுல விருப்பப்பட மாட்டாங்க..நீதான் எடுத்துச் சொல்லணும் "

        இருதலைக் கொள்ளி எறும்பின் நிலைக்காளானேன்..வஜீஹா மாமிக்கு சார்பாக இவனிடம் பேச வந்தால் இவன் சார்பாக அவரிடம் பேசப் போகவேண்டும் போலிருக்கிறது.

        "சரி..அப்ப நாளைக்கே கேட்டுப்பாரு...நான் வேலைக்குப் போறதுக்கு முந்தி ஏதாச்சும் ஒண்டு செஞ்சு வச்சிட்டுப் போறேன் "

        இரவுச் சாப்பாட்டுக்குப் பின்னர் திரும்பவும் மழை பிடித்துக்கொண்டது. சேற்றுப்பாதையில் சைக்கிள் மிதித்து விழுந்து தொலைத்தால் திரும்பவும் விபரீதமென சைக்கிளை எனது வீட்டில் வைத்து விட்டுக் குடையைக் கொடுத்து நடந்து போகச் சொல்லியனுப்பினேன். அவன் போய் வெகுநேரமாகியும் எனக்குத் தூக்கம் வரவில்லை.

        மழை விட்டிருந்த மறுநாட் காலை பத்து மணிக்கெல்லாம் வந்த அவனது தொலைபேசி அழைப்பு எங்கிருக்கிறேனெனக் கேட்டு உடனே என்னைச் சந்திக்கவேண்டுமெனவும் வீட்டிலேயே இருக்கும்படியும் உடனே வருவதாகவும் சொன்னது. நான் காத்திருக்கத் தொடங்கினேன்.

        குடையைத் தந்தவனின் முகம் சோர்ந்துபோயிருந்தது.. வீட்டில் ஏதாவது பிரச்சினை பண்ணி விட்டு வந்திருப்பானோ ? மேலும் என்னை யோசிக்கவிடாமல்

        " போன்ல அவக்கிட்டப் பேசினேன் " என்றான்.

        " ஓஹ்..என்ன சொன்னா? "

        " ஒரு நோயாளிய அன்பாப் பார்த்துக்கொள்றது நர்ஸ்மாரோட கடமையாம்..அவளுக்கு என்னை மாதிரியே ஒரு நானா ஆர்மில இருக்கானாம்..அதனாலயும்தான் அன்பாப் பார்த்துக்கொண்டாளாம் "

        " ம்ம்..நல்ல விஷயம். நீதான் தப்பாப் புரிஞ்சுக்கொண்டிரிக்கிறாய்..நீ கேட்டதுக்கு அவ கோபப்படாமயா இரிந்தா ? "

        " இல்லடா..நான் கேட்ட உடனே சிரிக்கத் தொடங்கிட்டாடா மச்சான்..அவளுக்கு ஏற்கெனவே கல்யாணமாகி ரெண்டு வயசுல ஒரு புள்ளயும் இரிக்காம் " என்றான்.

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


சொற்குறிப்புக்கள்

# ஊடு - வீடு
# ராத்தா - அக்கா
# உம்மா - அம்மா
# வாப்பா - அப்பா
# அண்ட அசலுல - அயலில்
# குளிசை - மாத்திரை
# நானா - அண்ணன்


நன்றி
# விடிவெள்ளி 07.10.2010 இதழ்
# விகடன்
# தமிழ் எழுத்தாளர்கள்
# உயிர்மை
# திண்ணை

Tuesday, August 3, 2010

சேகுவேராவின் சேற்று தேவதை

(கனடா உதயன் பத்திரிகை நிறுவனம் நடத்திய சிறுகதைப் போட்டியில் நான்காவது பரிசினை வென்ற சிறுகதை - 2010)



        யோகராணிக்குக் குளிக்கச் சேறு இன்றிப் பெரிதும் அவதிப்பட்டாள். தோளில் சுமந்த நீண்ட பொலிதீன் பையோடு சேற்று நீர் தேடி ஊர் முழுதும் அலைந்தபடியிருந்தாள். பதினைந்து வருடங்களுக்கும் மேலாக அவள் குளித்து வந்த அழுக்குச் சேற்று வாய்க்கால் மூடப்பட்டுவிட்டது. மூடப்பட்ட காலம் தொட்டு அவள் அள்ளிக்குளிக்கப் பயன்படுத்தும் அகன்ற பெரும் அழுக்குச் சிரட்டையைப் போல, அவளும் தலையில் ஈரம் படாமலே வீதிகள் தோறும் சுற்றி வந்தாள். இத்தனைக்கும் ஊரின் மத்தியில் பெரிய ஆறு, நாணல்களைத் தொட்டபடி ஓடிக்கொண்டிருக்கிறது.

        அவளுக்கென்று தனி இருப்பிடம் இல்லை. இருட்டிவிட்டால் போதும். எந்த இடத்தில் நிற்கிறாளோ அதற்கு அண்மையிலுள்ள வீட்டின் திண்ணையில், மாட்டுக்கொட்டகையில், கிணற்றடியிலெனத் தங்கிவிடுவாள். அவளால் யாருக்கும் எந்தத் தொந்தரவுமற்ற காரணத்தால் ஊரார் எதுவும் சொல்வதில்லை. இன்னுமொரு காரணம் இருக்கிறது. விடியலின் முதல் கிரணம் கண்டு அவள் விழித்தெழுந்து, எந்த இடத்தில் தங்கினாளோ அந்த இடம், முற்றம், கிணற்றடி என எல்லா இடத்தையும் மிகவும் நேர்த்தியாகக் கூட்டிச் சுத்தம் செய்துவிட்டு நகர்வாள். சூழ இருக்கும் குப்பைகளை எல்லாம் அள்ளிக் கொண்டு போவாள். தான் அழுக்காக இருந்தாளே ஒழிய சூழ இருந்தவைகளை ஒரு போதும் அழுக்கடைய விட்டதில்லை அவள்.

        வீடுகளில் கொடுக்கப்படும் எஞ்சிய பாண், ரொட்டி, சோற்றுக்கென அவளது நீண்ட பொலிதீன் பைக்குள் ஒரு சிறிய பொலிதீன் பையிருந்தது. ஓரங்களில் கிழிந்து அழுக்கேறிய இன்னுமொரு உடுப்போடு ஒரு போர்வையையும் சுருட்டி அவள் அந்த நீண்ட பொலிதீன் பைக்குள் பத்திரப்படுத்தியிருந்தாள். அவ்வப்போது பார்த்துத் தனது அழகிய இறந்த காலத்தை மீட்டவென அந்தப் போர்வைக்குள் அவளது குடும்பப் புகைப்படமொன்றையும் ஒளித்துப் பாதுகாத்து வந்தாள்.

        அவளது தங்கையின் பிறந்தநாளொன்றில் தனது கணவரோடு சேர்த்து மூவருமாக ஜானகி ஸ்டுடியோவில் போய் எடுத்துச் சட்டமிட்ட புகைப்படமது. யாரும் அருகில் இல்லாப் பொழுதுகளில் மட்டும் வெளியே எடுத்து அவ்வப்போது பார்த்துக் கண்ணீர் உகுப்பவள், பூனை அசையும் சிறு சலனத்துக்கும் பதறியவளாகப் படத்தை ஒளிப்பாள். மூளை பிசகிவிட்டதெனப் பெரியவர்களாலும், பைத்தியம் எனச் சிறுவர்களாலும் அழைக்கப்படுபவள் முன்னர் அழகானவளாகவும், அன்பானவளாகவும், மிகத்தூய்மையானவளாகவும் இருந்தவள்தான்.

        எண்பதுகளின் இறுதிப்பகுதியில் அரசாங்கம் வழங்கிய கல்லூரி குவார்ட்டஸில் அவனும் யோகராணியும் தங்கியிருந்த காலப்பகுதியில்தான் ஜே.வி.பி குழப்பமென எல்லோராலும் அழைக்கப்பட்ட ஜே.வி.பி கலவரம் அவ்வூரிலும் உச்சத்தை எட்டியது. வசந்தனுக்கு ஆசிரியர் வேலை. அவ்வூரின் மத்திய கல்லூரியில் உயர்தர வகுப்புக்களுக்கு அரசியல் பாடம் கற்றுக்கொடுத்துவந்தான். நல்லவன். அவர்களது சொந்த ஊர் இதுவல்லவெனினும் இங்கு மாற்றல் கிடைத்தவனுக்குத் துணையாகத் தனது வாசிகசாலை உதவியாளர் பணியையும் விட்டுவிட்டு வந்த யோகராணி தையற்தொழிலைச் செய்துகொண்டு வீட்டோடு இருந்து வந்தாள்.

        இக் கலவரம் ஆண்டாண்டு காலமாக நீடித்தது. இலங்கையின் வடக்கு கிழக்கில் இந்திய அமைதிப் படையினரின் பயங்கரவாதங்கள்  இடம்பெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியது. ஏனைய திசைகளிலெல்லாம் ஜே.வி.பி. கலகக்காரர்களின் பயங்கரவாதம் இடம்பெற்றுக் கொண்டிருந்தது.  தினமும் கலகக்காரர்களால் விதிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம்  தொடர்ந்தது. இரவுகளில் வீடுகளில் பெரும் வெளிச்சம் துப்பும் விளக்குகளை ஏற்றிவைப்பது கூடத் தடுக்கப்பட்டிருந்த காலமது. அதற்கும் மேலாக மின்மாற்றிகளும் மின்கம்பங்களும் கிளர்ச்சிக்காரர்களால் தகர்க்கப்பட தேசத்தின் ஊர்கள் தோறும் இருள்கள் சூழ்ந்தன. கம்யூனிசத்துக்கும், இடதுசாரிக் கொள்கைகளுக்கும் ஆதரவாகப் பெரும் படைகளாக பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்கள் திரண்டனர். தபாலகங்கள், அரச நிறுவனங்கள், அரச கட்டடங்கள் பலவற்றையும் உடைத்தும் எரித்தும் அழிக்க முனைந்தனர். பஸ், ரயில் போக்குவரத்துகள் ஸ்தம்பிதமடைந்தன. மீறி நகர்ந்தவை எரிக்கப்பட்டன. பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மறு அறிவித்தல் வரை இழுத்து மூடப்பட்டன. வீதிகள் வெறிச்சோடின.

        கலகக்காரர்கள் தாங்கள் சொல்வதைச் செய்ய மறுக்கும் அனைவரையும் கொன்றார்கள். தமது பணத்தேவைகளுக்காக வீடுகள் புகுந்து கொள்ளையடித்தார்கள். ஆட்களைக் கடத்திக் கப்பம் கேட்டார்கள். அவர்களை அழித்து ஒழிக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளும் தினமும் தொடர்ந்தன.  தினந்தோறும் இரவுகளில் எல்லா வீதிகளிலும் காவல்துறையினர் மற்றும் கருப்புப்பூனைப் படையினர் ஜே.வி.பி கிளர்ச்சிக்காரர்களை வேட்டையாடவென வலம் வந்தனர். சந்தேகத்துக்குரியவர்களைக் கைது செய்தனர். அவ்வாறு கைது செய்யப்படுபவர்கள் மீண்டு வரமாட்டார்கள்.

        யோகராணிக்கு ஒரு தங்கையிருந்தாள். பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தவள் கம்யூனிசக் கொள்கைகளில் கவரப்பட்டாள். அதன் கூட்டங்களுக்குத் தவறாது சென்றுவந்தவள் படையினரால் தேடப்பட்டு வந்த பொழுது எப்படியோ தப்பித்து சகோதரியிடம் அடைக்கலம் தேடிவந்தாள். நள்ளிரவொன்றில் அவளுக்கான பதுங்குகுழி வீட்டின் அருகேயிருந்த காட்டுக்குள் வசந்தனாலும் யோகராணியாலும் தோண்டப்பட்டது. மேலால் குறுக்கே தடிகளிட்டு தென்னோலை, வாழை இலைச் சருகுகள் என மூடப்பட்ட குழியில் உமாவின் நாட்கள் கழிந்தன.

        பகல் வேளைகளுக்கும் சேர்த்து இரவில் தயாரிக்கும் உணவினை யோகராணி எடுத்து வருவாள். பல இரவுகள் தங்கையுடனே பதுங்குகுழி இருளுக்குள் கழித்தாள். இடையிடையே தங்கையைத் தேடிப் படையினர் வீட்டுக்கு வரும் நாட்களில் நெஞ்சு பதறியபடி அவள் தம் வீட்டில் இல்லையெனப் பதிலளித்தார்கள் வசந்தனும் யோகராணியும். மழை நாட்களில் குழியினோரமாக நீரும், சேறுமாக ஒழுகி வழியும். தூங்க விடாமல் விஷப்பூச்சிகளும், தேளும், தவளையும் குழிக்குள் ஒதுங்கும். குளிருக்கும் சகதிக்கும் மத்தியில் உயிரற்ற பிணம் போல அச்சத்தில் உறைந்து கிடப்பாள் உமா.

        இப்படியாக மூன்று மாதங்களுக்கும் மேலாக இருந்துவந்த வேளையில்தான் கல்லூரியில் வசந்தன் கற்பித்து வந்த வகுப்பறைக் கட்டிடம் ஒரு இரவில் கிளர்ச்சியாளர்களால் எரியூட்டப்பட்டது. தீப்பற்றியெரிவதைக் கண்ட கல்லூரி வளாக குவார்ட்டஸில் தங்கியிருந்த அவன் ஓடிவந்து வீதியில் நின்று நெருப்பு , நெருப்பெனக் கத்தினான். செய்வதறியாத அல்லது ஏதும் செய்யப் பயந்த ஊராட்கள் வேடிக்கை பார்த்தனர். இது குறித்து முதலில் காவல்துறைக்கும் அதிபருக்கும் அவன் தான் அறிவித்தான். கிளர்ச்சியாளர்களின் கோபம் அவனில் சூழ்ந்தது. கால வரைமுறையற்ற விடுமுறை கல்லூரியில் விடப்பட்டது.

        இச் சம்பவத்திற்குப் பிறகு ஊருக்குள் தினந்தோறும் காவல்துறை விசாரணைகளும் கரும்பூனைப்படையின் கடத்தல்களும் அதிகரித்தன. கிளர்ச்சிக்காரர்களெனக் கண்டறியப்பட்டவர்கள், சந்தேகத்துக்குரியவர்கள் ஒவ்வொருவராகக் கரும்பூனைப் படையினரால் கைது செய்யப்பட்டனர். கடத்தப்பட்டனர். கடத்தப்பட்டவர்கள் வீதிகளினோரமும், மின்கம்பங்களிலும் சுடப்பட்டும் , எரிக்கப்பட்டும் ,வதைக்கப்பட்டும் பிணங்களாகக் கிடந்தனர். நதிகளில் பிணங்கள் மிதந்துவந்தன. ஊரிலிருந்த கிளர்ச்சிகளோடு சம்பந்தப்பட்ட இளைஞர்கள் காடுகளுக்குள் மரங்கள் மேலும், பதுங்குகுழிகளுக்குள்ளும் ஒளிந்து வாழ்ந்தனர்.

        இவ்வாறான நாட்களின் ஒரு பிற்பகலில் ஊரார் அனைவருக்கும் அடையாள அட்டைகளோடு கல்லூரி மைதானத்துக்கு வரச் சொல்லிக் காவல்துறையினரால் அறிவிப்புச் செய்யப்பட்டது. ஊரார் அனைவரோடும் வசந்தனும் யோகராணியுமாக எல்லோரும் வரிசையில் நிற்கவைக்கப்பட்டார்கள். கரும்பூனைப் படையினரால் கண்களிரண்டும் இருக்குமிடத்தில் மட்டும் துளையிடப்பட்டு முழுவதுமாகக் கறுப்பங்கி அணிந்து சாக்கினால் தலை மூடப்பட்ட உருவம் ஒவ்வொரு வரிசையாக படையினரோடு பொதுமக்களைப் பார்த்தபடி நகர்த்தப்பட்டது. முன்னமே கைதுசெய்யப்பட்ட கிளர்ச்சியாளனாக இருக்கக்கூடுமான அது தலையசைத்துக் குறிப்பால் காட்டியவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு வாகனங்களில் அடைக்கப்பட்டனர்.

        அவ்வுருவம் வசந்தனையும் பார்த்துத் தலையசைத்த கணத்தில் யோகராணி அதிர்ந்தாள். பெருங்குரலெடுத்த அழுகை அவளையும் மீறி வெளிப்பட்டது. பாரிய வெளிச்சம் சுமந்த இடி அவள் தலையில் வீழ்ந்து வாழ்வினை இருளாக்கியது. மயங்கிவீழ்ந்தவளை வீட்டுக்குத் தூக்கிவந்து மயக்கம் தெளிவித்து அகன்றது கூட்டம். சித்திரவதை தாங்காமல் சொன்னானோ, அவர்களாகக் கண்டுபிடித்தார்களோ அன்றைய இரவிலேயே உமா ஒளிந்திருந்த காட்டுக்குள் கரும்பூனைகள் நுழைந்தன. அவள் கதறக்கதறத் தாக்கிக் கடத்தப்பட்டாள். காப்பாற்றவென மறித்த யோகராணிக்கும் பல அடிகள் விழுந்து இறுதியாகத் துப்பாக்கியின் பின்புறத்தால் பின்மண்டையில் அடிவாங்கி அவ்விடத்திலேயே மயங்கிவிழுந்தாள்.

        அவ்விரவில் பலத்துக் கத்தியும் கதறியும் ஊராட்கள் எவரும் காப்பாற்றவென வரவில்லை. எல்லோரிடத்திலும் மிகுந்த அச்சம் சூழ்ந்த நாட்களவை. அடிபட்டுக்கிடந்தவள் முற்றத்தில் அப்படியே கிடந்தாள். மறுநாட்காலை கல்லூரி வாசலருகே டயர் போட்டுப் பாதி எரிந்த நிலையில் வசந்தனின் சடலம் கிடந்தது. உமா குறித்தான எந்தத்தகவலும் யாருக்கும் இன்றுவரைக்கும் தெரியவரவேயில்லை. காகங்களால் குதறப்பட்ட சடலத்தின் சதைத்துணுக்குகள் கல்லூரிக்கிணற்றில் மிதந்தன.

        அப்பொழுதிலிருந்துதான் அவள் சித்தம் பேதலித்திருக்கக்கூடும். ஆட்சிகள் மாறின. கிளர்ச்சிக்காரர்கள் முற்றிலுமாக அழித்து ஒழிக்கப்பட்டனர். மீளப்பெற முடியாத்திசைகளில் அவளது வசந்தங்கள் தொலைந்தன. காலங்களுமாற்றாத் துயர்களைச் சுமந்து வாழத்திணிக்கப்பட்டாள். என்றோ உதித்து மறைந்த சேகுவேராவின் கருத்துக்களில் அவளது குடும்பம், வாழ்க்கை, சுயம் எல்லாம் அழிந்தது. நீண்ட அழகிய நதி நீரோட்டம், பழகிய வனங்கள், கடை வீதிகள், தெரியாத சனங்கள் அவளுக்கு அச்சமூட்டி அசைந்தன.

        பகல் முழுதும் வயல்வெளிகளில் தங்கினாள். வயல்வரப்பினூடு ஓடும் சேற்றுநீரில் உடுத்த உடையோடு சிரட்டையால் அள்ளிக் குளிக்கப்பழகினாள். மழையென்றில்லை. வெயிலென்றில்லை. அவளுக்குக் குளிக்கவேண்டும். அதுவும் ஆனந்தமாகச் சிரித்துச் சிரித்து அவள் குளிப்பாள். வழியும் நீரின் சொட்டுக்களில் வசந்தனை, உமாவைக் காணுபவளாக இருக்கக்கூடும். குளித்துத் துடைத்து, உடை மாற்றி அதே வயல்வரப்பில் ஈர ஆடையைக் காயப்போட்டுவிட்டு அந்திநேரத்தில் ஊருக்குள் நடக்கத் துவங்குவாள்.

        இப்பொழுது அவளுக்குப் பகலில் தங்கவும் குளிக்கவும் வாய்ப்பற்றுப் போனது. வயல்வெளிகள் மூடப்பட்டுப் பெரிய கட்டிடங்கள் கட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றன. குளிக்கச் சேற்றுநீர் தேடி ஊர் முழுதும் அலைந்தவள் ஓர் நாள் விடியலில் செண்பகமக்கா வீட்டுப் பாழடைந்த கிணற்றில் பிணமாக மிதந்தாள். குளிக்கவெனப் பாய்ந்திருக்கக் கூடுமென ஊருக்குள் பேசிக் கொண்டனர்.

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
mrishanshareef@gmail.com


நன்றி
# உதயன் பத்திரிகை - கனடா
# தமிழ் முரசு - அவுஸ்திரேலியா
# காற்றுவெளி
# நவீன விருட்சம்
# பெண்ணியம்
# உயிர்மை
# தமிழ் எழுத்தாளர்கள்

Friday, July 2, 2010

போதி மரம்

கனகனுக்கு இன்று முச்சந்தியைத் தாண்டும்போது அந்தச் சத்தம் கேட்டது. காற்றில் ஏதோவொரு வாடை. கூடவே ஜல் ஜல்லெனக் கொலுசுச்சத்தம். சுற்றுமுற்றும் பார்த்தான். அந்த அமாவாசை இரவில் இருட்டைத் தவிர வேறெதுவும் தெரியவில்லை. கண்கள் பீதியில் மருண்டன. கறுப்பு மையை யாரோ வானிலிருந்து கொட்டிவிட்டதுபோல மேலும் இருள். விழிகளை மூடி மூடித் திறந்தான். கால்கள் சீவனற்றுப் போய் உதறலெடுக்க பற்களும் நடுங்கத் தொடங்கின.

அது முச்சந்தி. பகலெல்லாம் இருக்கும் சனநடமாட்டத்தின் சத்தங்களையும், வாகனங்களின் இரைச்சல்களையும் அந்தியாகிவிட்டால் எந்தத் துளைக்குள்ளோ ஒளித்துக் கொண்டு நிச்சலனத்தை எங்கும் வழியவிட்டு அமைதியாக அடங்கிவிடும் கிராமமது. அச் சந்தியில் ஆட்களின் நிழலுக்காக நடப்பட்ட அல்லது முன்னெப்போதோ தானாக முளைவிட்டு இப்பொழுது செழித்து வளர்ந்து பரந்திருக்கும் ஆலமரம், மாமரம் மற்றும் அரச மரங்களின் நிழல்தான் பகற்பொழுதில் அக்கிராமத்துக்கான சந்தைத் தளம், ஊருக்கு வந்து போகும் ஒரே பஸ்ஸுக்கான பஸ் தரிப்பு நிலையம். மற்றும் முக்கியமாக ஒரு நாள் நள்ளிரவில் கனகனின் முதல் மனைவி தூக்குப்போட்டுக் கொண்டு செத்த இடம்.

இவன் கொடுத்த அடிகாயங்களோடு கால்கள் காற்றில் அலைய, நாக்குப் பிதுங்க அவள் செத்துத் தொங்கிய அதே மாமரத்திலிருந்துதான் கொலுசுச் சத்தம் கேட்கிறது. ஒருவேளை அவளது ஆவியாக இருக்குமோ ? இன்று அந்த மாமரத்தைத் தாண்டி, கள்ளு குடிக்கப் போகப் பயமாக இருந்தது அவனுக்கு. பயம். பேய்ப்பயம். பேய்கள், பிசாசுகள், மோகினிகள், ஆவிகள் குறித்தான எல்லாச் சிறு வயதுக் கதைகளும் இன்னும் போதை ஏறாத அவனது தலைக்குள் ஊசலாடத் தொடங்கின. ஒரு தடவை இது போல அமாவாசை இரவொன்றில் வெள்ளைச் சேலை காற்றிலாட கையில் குழந்தையும் நீண்ட பற்களுமாக இதே சந்தியில் சாமிப்பிள்ளையின் சைக்கிளை வழி மறித்ததாக ஊருக்குள் சொல்லப்பட்ட மோகினிப் பெண்ணின் கதை நினைவுக்கு வந்து தொலைத்தது. குளக்கரையிலிருந்து வந்த ஈரக்காற்று காதருகில் ஊளையிடுவதாக எண்ணி மேனி சிலிர்த்தான். ஜல் ஜல் சத்தம் அவனுக்கு மிகவும் அருகில் கேட்டுக் கொண்டே இருந்தது.

முழங்கால் வரை ஏற்றிக் கட்டியிருந்த சாரத்தின் ஒரு முனையைப் பற்றியபடி குடிசைக்கு ஓடிவிடலாமென நினைத்தான். நெஞ்சு திக் திக்கென அடித்துக்கொண்டது. வழமையாக போதையில் தள்ளாடும், குடிசையில் புலியைக் கண்டு மிரண்டு போய் நிற்கும் மான்குட்டியாய் அச்சத்தில் உறைந்திருக்கும் பரஞ்சோதியை எட்டி உதைத்து விளையாடும் கால்கள் இன்று அங்கிருந்து பார்த்தால் தெரியும் தூரத்திலிருந்த அவனது குடிசைக்கு அவசரமாகப் போய்விடக்கூட முடியாமல் தள்ளாடின.

அவனுக்கு பழகிய ஒற்றையடிப் பாதையிது. ஒரு காலத்தில் இவனது அடிகளும் வசவுகளும் தாங்கமுடியாப் பொழுதுகளில், தப்பித்து ஓடும் முதல் மனைவியை விரட்டிப்பிடித்து எல்லோரும் பார்த்திருக்க காட்டுத்தனமான அடி, உதைகளோடு இழுத்துவரும் ஒற்றையடிப் பாதையிது. அவள் பாதைதோறும் அவலக்குரல் எழுப்புவாள். ஓலமிடுவாள்.அவன் மேலும் மேலும் அடிப்பான். அவனைச் சபிப்பாள். விஷப்பாம்பு கொத்தட்டும், இடி வந்து அவன் மேல் விழட்டுமெனச் சொல்லிச் சொல்லி அழுவாள். இப்போது கட்டியிருக்கும் பரஞ்சோதி அப்படியில்லை. எவ்வளவு அடித்தாலும் குடிசைக்குள்ளேயே அழுது வழியும் ஊமைப் பெண். விசும்பலைத் தவிர ஒற்றைச் சொல் எழாது.

காற்று சுழன்று சுழன்று அடித்தது. பேயின் கொலுசுச் சத்தமிப்பொழுது அதிகமான சலனத்துடன் கேட்கத் தொடங்கியது. பாதையோடு இழுத்துவைத்து ஆணியறைந்தது போல பாதங்கள் நகர மறுத்தன. வெடவெடத்தன. எட்டி எட்டி நடக்க நடக்க குடிசை விலகி விலகிப்போவதைப் போலவே தெரிந்தது அவனுக்கு. பார்க்கும் திசைகளிலிருந்தெல்லாம் அவனது முதல் மனைவி வெள்ளைச் சேலையோடு கால்களற்று அந்தரத்தில் ஆடியபடி 'இனிமே அடிப்பியாடா நீ?' எனக் கண்களில் கோபம் மின்ன, நாக்கைத் துருத்திக் கொண்டு கேட்பதாக அவனுக்குத் தோன்றியது.

பரஞ்சோதிக்கு ஆச்சரியமாகப் போயிற்று. கனகன் இன்று நேர காலத்தோடு வீட்டுக்கு வந்திருக்கிறான். அதுவும் குடிக்காமல் வந்திருக்கிறான். தான் ஏதும் கனாக் காண்கிறோமா என்ற சந்தேகம் கூட அவளுக்குள் எழும்பி அடங்கிற்று. பெண்களின் உடுத்தாடை போல நெஞ்சு வரை ஏற்றிக் கட்டிய சாரம் எப்பொழுது அவிழ்ந்து விடுமோ என்ற சுரணை சிறிதுமற்று, ஊரே கேட்கும் வண்ணம் புலம்பலும் ஓலமுமாக இரவில் விழுந்து விழுந்து வீடு வந்து, இருக்கிற மிச்சப்பலத்தைக் கொண்டு அவளைத் தாக்காமல் நித்திரை கொள்ளாதவன் இன்று அமைதியானவனாக வீடு வந்து சேர்ந்திருக்கிறானெனில் உலகின் மூலையில் ஏதோவொரு அதிசயம் நேர்ந்திருக்கத்தானே வேண்டும்? இரும்புப் பட்டறையொன்றில் வாரக்கூலிக்கு வேலை செய்யும் அவனது ஊதியம் முழுதும் கள்ளுக்கடைக்கும், பெட்டிக்கடை பீடிச் சுருள்களுக்குமே இரைக்கப்பட்டுக்கொண்டிருக்க, அப்பம், சின்னச் சின்னப் பலகாரங்கள் செய்து சந்தையில் விற்றுவரும் காசில்தான் பரஞ்சோதி குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறாள்.

'அடி கெழட்டு மூதேவி', 'முண்டச் சிறுக்கி' போன்ற வசவு வார்த்தைகளோடே வீட்டு வாசலுக்கு வருபவன் இன்று அமைதியாக வந்திருப்பதைப் பார்த்ததில் அவளுக்கு ஆச்சரியம் இன்னும் அதிகரித்தது. ஒருவேளை தன்னைப் போல இவனும் ஊமையாகி விட்டானோ? இருட்டை விரட்டப் பார்க்கும் குருட்டு வெளிச்சத்தை ஏந்தியிருந்த சிறு விளக்கினடியில் கயிற்றுக்கட்டிலில் உட்கார்ந்திருந்த கனகனின் முகம் பேயறைந்ததைப் போலிருந்தது. வியர்வை வழிந்து சட்டை தெப்பமாக நனைந்திருந்தது. தண்ணீர் கொண்டு வந்துகொடுத்தாள். மடக்கு மடக்கென்று குடித்தவன் கட்டிலில் சாய்ந்துகொண்டு விட்டத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

யார் அவன் புத்தியைத் தெளியவிட்டது ? அடிவாங்கிக் கண்ணீரோடு புலம்பும் அவளது ஓலங்களிற்கும் பிரார்த்தனைகளுக்கும் பலன் கிடைத்து விட்டதைப் போல மகிழ்ந்தாள். ஒருவேளை குடிக்க இன்று காசிருந்திருக்காதோ? இல்லையே..இன்று வாரக் கூலி கிடைக்கும் நாளாயிற்றே. ஒருவேளை குடிக்கச் சரக்கிருந்திருக்காதோ? அதற்கும் சாத்தியமில்லை. தோட்டத்திலிருந்து கள்முட்டி இறக்கிப் போவதை இன்றும் கண்டாளே . எப்படியோ, இந்த மகிழ்ச்சி தினமும் நீடிக்கவேண்டுமென மனதுக்குள் பிரார்த்தித்துக் கொண்டாள். மிகவும் சந்தோஷப்படவும் பயந்தாள். நாளைக்குத் திரும்பவும் வேதாளம் மரத்தில் ஏறிவிடின், தொடரும் நாட்களில் அடி, உதை, துன்பம்தான்.

நடமாடும் கண்ணாடிப் புகைப்படச் சட்டத்தைப் போல ஒல்லியானவள் பரஞ்சோதி. வாய் பேச வராத ஊமை ஜீவன். எத்தனை அடி, உதைகளைத்தான் தாங்குவாள்? எதிர்த்துக் கேட்க அப்பா, அம்மா இல்லை. சகோதரர்கள் இல்லை. அவளது அப்பாவின் சாவு வீட்டில்தான் அவளது திருமணமே நிச்சயமாயிற்று. கனகனின் மூத்தமனைவி அதிர்ஷ்டக்காரி. அவனது அடி, உதைகளைத் தாங்கமுடியா நள்ளிரவொன்றில் முச்சந்தியிலிருந்த மாமரத்தில் தூக்கில் தொங்கினாள். சில மாதங்கள் கழித்து அயல்கிராமத்திலிருந்த அவளது அப்பாவின் சாவு வீட்டுக்குப் போனவனுக்கு ஊர்ப்பெரியவர்கள் சேர்ந்து நிராதரவாக நின்ற அவளது தங்கை பரஞ்சோதியை நிச்சயித்துக் கட்டிக் கொடுத்துவிட்டார்கள். வேறுவழியின்றி கழுத்தில் மஞ்சள் கயிறு தொங்க, பலியாடு போல அவன் பின்னால் வந்தாள்.

தாலி கட்டி, இந்தக் குடிசைக்குக் கூட்டி வந்து கொஞ்சநாள் வரை நன்றாகத்தானிருந்தான் அவன். பின்னர் பட்டறையில் இரும்படித்த அலுப்பெனச் சொல்லி ஓரிருநாட்கள் குடித்துவிட்டு வந்துபார்த்தான். அவளேதும் சொல்லவில்லை. மிரட்சி நிரம்பிய விழிகளோடும் ஏதும் சொல்லவியலாப் பதற்றத்தோடும் அவள் நின்றிருந்ததை அவளது சம்மதமெனக் கொண்டான் அவன்.

எல்லாம் கொஞ்சநாளைக்குத்தான். தொடர்ந்த நாட்களில் பழகிய தோஷமோ, பிடித்த விஷயமோ மாட்டுக்கு அடிப்பதைப் போல அவளையும் போட்டு அடித்துவந்தான். நல்லவேளை இவனது அடிஉதைகள் குடிசைக்குள்ளே மட்டுமாக நின்றுவிட்டது. அக்காவுக்குப் போல் வீதி வழியே எல்லோரும் பார்க்கக் கூந்தல் பிடித்திழுத்து அடிப்பதில்லை. இவளும் அடிக்கும்போது வெளியே ஓடுவதுமில்லை. இன்று அவளுக்குப் பெருமகிழ்வாக இருந்தது. கணவன் பசியில் வந்திருப்பானென எண்ணி அவசரம் அவசரமாகக் கஞ்சி காய்ச்சிக் கொண்டிருந்தாள்.

கனகனின் கண்களில் மூத்தவள் நடமாடத் தொடங்கினாள். எப்பொழுதோ அவளுக்கு சீதனமாகக் கொடுத்த வெள்ளிக்கொலுசைத் தான் விற்றுக்குடித்ததுவும், இவனது சித்திரவதை தாங்காமல் ' உன்னைச் சும்மா விடமாட்டேண்டா' எனக் கத்திக்கொண்டு வெளியே ஓடியவளை மறுநாள் சடலமாகத்தான் குடிசைக்குக் கொண்டுவந்ததுவும் நினைவுக்கு வந்துதொலைத்தது. ஒருவேளை அவளை வதைத்ததைப் போலவே, தான் இப்பொழுது அவளது தங்கையை வதைப்பதற்காகப் பேயாக உலாவித் தன்னைப் பழிவாங்கக் காத்திருக்கிறாளோ?

கஞ்சி கொண்டு வந்து அருகில் வைத்துவிட்டு நகர்ந்த பரஞ்சோதியை அழைத்தான். கட்டிலில் அமரச் சொன்னான். அணிந்திருந்த சட்டையின் முழங்கை மடிப்பில் செருகிவைத்திருந்த காசுத்தாள்களை அவளிடம் கொடுத்தான்.
" பார்த்துச் செலவழி புள்ள..வயித்துல வேற உண்டாகியிருக்கே..இனிமே எதாச்சும் நமக்குன்னு சேமிக்கணும் " என்றான்.

எவனோ ஒரு வண்டிக்காரன் வீசியெறிந்த, உடைந்து போன தன் வண்டி மாட்டின் ஒற்றைக் கழுத்துச் சலங்கையைச் சுமந்திருந்த அவ்வூர் முச்சந்தி மாமரத்தின் கிளை இப்படியாக ஒரு குடும்பத்தின் நல்வாழ்வுக்குத் தான் காரணமானதை அறியாமல் தொடர்ந்தும் காற்றில் ஆடியாடி ஓசையை எழுப்பிக்கொண்டேயிருந்தது.

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை



நன்றி
# அகநாழிகை
# விகடன்
# உயிர்மை
# திண்ணை
# தமிழ் எழுத்தாளர்கள்
# தமிழ் முரசு அவுஸ்திரேலியா

Tuesday, February 2, 2010

பட்சி

# தமிழ்மன்றம் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதலிடத்தைப் பெற்றுத் தந்த இச் சிறுகதை "சிறந்த கதாசிரியர்" விருதையும் பெற்றுத் தந்தது.

பட்சி

' உண்மையாச் சொல்லணும்னா எனக்கு உன்கிட்ட இந்த எழுத்துத்தான் ரொம்பப் பிடிச்சிருக்கு. எவ்ளோ உணர்வுபூர்வமா எழுதுற பாரு..அப்றம் அன்னிக்கு ஒரு பேட்டியில உன்னோட போட்டோ பார்த்தேன்..யப்பா..சான்ஸே இல்ல..அழகு, திறமை,  பணிவு, அடக்கம் எல்லாம் சேர்ந்து ஒரு பெண்ணா உருவானதுபோல...அதிலும் உன் கண்கள் இருக்கே..காந்தம்..அவ்ளோ அழகு.. பக்கத்துல இருந்து பார்த்துட்டே இருக்கணும்போல'

        அவள் ஒரு கவிதாயினி. அப்படித்தான் எல்லோரும் சொன்னார்கள். அவள் அதை இயல்பாக வரும்  புன்னகையோடு மறுத்துவந்தாள். இணைய உரையாடல்களின் போதும், மின்னஞ்சல்களிலும், நேரடியாகவும், கடிதங்களிலும் பலர் இதனைச் சொல்லும்போதும், பாராட்டும்போதும் முறுவலித்தாள். தான் மனதில் தோன்றுவதை மட்டுமே கிறுக்கிச் செல்வதாக விடைபகர்ந்தாள். பதில்கள் கண்டும் கேட்டும் சிலர் இது குறித்து, அருமையாக எழுதிவருவதாக  வலியுறுத்திச் சொல்லும்போது ஏதும் சொல்லாமல் தொடர்ந்த புன்னகையோடு மௌனம் பேசினாள். அவளுக்குத் தெரியாமலேயே அவளது எழுத்துக்கள் ஒரு சிலந்தியைப் போல அவளைச் சூழவும் புகழை, ஒரு வலையாகப் பின்னியிருந்தன.

' நான் நேரடியாவே சொல்லிடுறேன்..உன்னய எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு..இவ்ளோ நாளா நான் தேடிட்டிருந்த தேவதை கிடைச்சிட்டான்னு மனசு சொல்லுது.. என்னை உனக்குப் பிடிக்குமான்னு தெரியல..ஆனா ஒண்ணு தெரியும்..நீ எப்பவும் அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்குறவ இல்லன்னு தெரியும்.. நான் இதுவரை யாரையும் லவ் பண்ணதில்ல..ஆனா உன்னப் பார்த்ததும் விழுந்துட்டேன்..நீ என்ன சொல்ற?'

        உண்மையாகவே அவள் மனதில் தோன்றுவதை மட்டும்தான் எழுதிவந்தாள். நிறைய வாசிப்பாள். தனிமை, அது தரும் துயரங்கள் நிரம்பி வழிவதைப் போல உணர்கையில் அதனைப் பக்கங்களில் வழியவிட்டாள். அவளது எழுத்துக்கள் எப்பொழுதும் உணர்ச்சி மயமாகவும், அழுகை தரக் கூடியதாகவும், சிலவேளை தன்னைப் பொறுத்தி உணரக்கூடியதாக இருப்பதாகவும் வாசகர்கள், ரசிகர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இணைய இதழ்களும் பிரபல பத்திரிகைகள் மற்றும் சிற்றிதழ்களும் அவளது படைப்புக்களைக் கேட்டு வாங்கிப் பிரசுரிக்கும் தரத்தில் அவளது எழுத்துக்கள் இருந்தன.

'ப்ளீஸ்..ஒரு பொண்ணுக்கிட்ட கெஞ்சுறது கஷ்டமாத்தான் இருக்கு.. நீ என்னை லவ் பண்ணக் கூட வேண்டாம்..ஆனா இப்படி பேசாம இருக்காதே. நீ இப்படி இருக்குறது எனக்கு இன்னும் ரொம்பக் கஷ்டமா இருக்கு..சாப்ட முடியல..தூங்க முடியல.. எதுவுமே பண்ணத் தோணல..வேலைக்குப் போகணுமேங்குறதுக்காக போய் வந்துட்டிருக்கேன்.. நான் உனக்கு அனுப்பணும்னு விரலக் கிழிச்சி ரத்தத்துல ஒரு கடிதம் கூட எழுதி வச்சிருக்கேன்..ஸ்கேன் பண்ணி அனுப்புறேன் பாரு..அதப் பார்த்தும் நீ மனசிறங்கலைன்னா, நான் என்னையே எரிச்சுப்பேன்..அப்றம் சந்தோஷமா இரு'

        அவளுக்கென்று யாருமற்று தனித்திருந்தாள். பெரும் மகிழ்வோடு இணைய நண்பர்களைக் குடும்பமெனக் கொண்டு எல்லோருடனும் வித்தியாசமெதுவுமின்றி அன்பானவளாகவே இருந்துவந்தாள். அவளுக்கென இணையமும் எழுத்தும் கூட இல்லையெனில், அவள் பெரிதாகப் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும். முதலில் தனிமை, ஏகாந்தம் குறித்துத் துயரமாக எழுதி வந்தவள் பின்னர் காதல் கவிதைகளும் எழுத ஆரம்பித்தாள். அவளது மின்னஞ்சலை நிறைத்த, அவள் நிராகரித்த காதல் விண்ணப்பங்களை அறிந்தவர்களெல்லாம் அவளை ஆச்சரியத்தோடு பார்க்கத் தொடங்கினர். யாரிடம் அவள் காதல் வயப்பட்டாள் எனக் கேட்டவர்களிடம் அவள் சொல்லவுமில்லை. யாருக்கும் தெரிந்திருக்கவுமில்லை. ஓட்டைகள் எதுவுமின்றி மூடிய ஒரு பெட்டிக்குள் அடைத்ததைப் போல, அவள் அந்த இரகசியத்தைக் காத்து வந்தாள். வெளியேற வழியற்ற இரகசியம் அந்த இருளுக்குள்ளேயே புதைந்தபடி உயிருடன் கிடந்தது.

'ம்ம்..ஊருல எனக்கொரு பொண்ணு பார்த்து வச்சிருக்காங்க..அண்ணாக்கிட்ட சொல்லிட்டேன்..அவன் புரிஞ்சுக்கிட்டான்...ஊருக்குப் போய் அம்மாப்பாக்கிட்டத்தான் சொல்லிப் பார்க்கணும்.. அவங்க எப்படியும் உன்னை மறுக்கமாட்டாங்க..பேரழகி நீ..மகாலட்சுமி ஒருத்தி வீட்டுக்கு வரும்போது வேணான்னு சொல்வாங்களா? எதுக்கு நீ யோசிக்கிற? ஹேய்..அழக்கூடாது..அவங்க உன்னை வேணான்னு சொன்னாங்கன்னாலும் நான் உன்னைக் கை விட்டுட மாட்டேன்..என்னை நம்பு ப்ளீஸ்..ஏன் எப்பப் பார்த்தாலும் எப்பவோ நடக்கப் போறதையெல்லாம் நெனச்சு நெனச்சு மனசப் போட்டுக் குழப்பிக்கிறே? இப்ப..இந்த நிமிஷம் சந்தோஷமாயிரு பெண்ணே..இங்க வா'

        அவளது காதல் குறித்தான மகிழ்வான எழுத்துக்கள் தொடர்ந்தன. பின்னர் ஓர் நாள் திடீரென்று அவை நின்றன. அவள் எழுதுவதை விட்டிருந்தாள். இணையம் வருவது குறித்தும் எழுத்துக்களைப் பக்கங்களில் மேயவிடுவது குறித்தும் பெரிதும் அஞ்சினாள். முன்னர் பார்த்துப் பரவசப்பட்ட புத்தகங்களைப் பார்க்கையில் கலவரப்பட்டாள். அவற்றினிடையில் எப்பொழுதோ கிறுக்கிவைத்த காதல் குறிப்புகள் கொண்ட கடதாசிகள் சிக்குகையில் தீயிலிட்டு எரித்தாள். சிலவேளை அழுதாள். பசித்திருந்தாள். அவள் வளர்த்துவந்த பூச்செடிகளைப் பராமரிக்காது வாடவிட்டாள். ஈற்றில் ஒழுங்குமுறைப்படி அழகாக எல்லாம் செய்பவள் ஏனோதானோவென இயங்கத் தொடங்கினாள். முன்னைய வாழ்க்கையிலிருந்து முழுவதுமாகத் தப்பித்து வாழ முயன்றாள்.

' நீ எழுதுறது எனக்குப் பிடிக்கல..இதையெல்லாம் நீ விட்டுறணும்..ஏன் எப்பப் பார்த்தாலும் உனக்கு மட்டும் இவ்ளோ மெயில் வருது நல்லா எழுதுறேன்னு பாராட்டி..? நானும்தான் எழுதுறேன்..ஒருத்தன் சீண்ட மாட்டேங்குறான்..பர்ஸனலா உன்னோட போட்டோஸ் அனுப்பிவச்சியா? பார்த்து வழிஞ்சுட்டு ஒவ்வொருத்தனும் பாராட்டுறானா? நம்ம கல்யாணத்துக்கு முன்னாடியே இதையெல்லாம் நிறுத்திடு. எனக்கு நீ எழுதுறது பிடிக்கல.. அப்றம் இந்த அழகு..எதுக்கு நீ மட்டும் இவ்ளோ அழகா..? சினிமால நடிக்கப் போறியா? பக்கத்துல நான் கறுப்பா, குண்டா நிக்கும்போது ஜோடிப் பொருத்தமே இல்லாத மாதிரி தோணுது'

        அவளது நண்பர்கள் அவளைத் தேடத் தொடங்கினர். அவளைக் குறித்த விசாரிப்புக்கள் அவளைத் தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் எல்லோரிடத்திலும் சுற்றிச் சுற்றி வந்தன. அவள் பிறரைச் சந்திக்கும் வாய்ப்புக்களைத் தரும் எல்லாத்திசைகளையும் அடைத்து தன்னை ஒளித்துக்கொண்டாள். வெளிச்சத்துக்கு வரப்பயந்தாள். அவளைச் சுற்றியிருந்த ஒளிவட்டம், அவளது எழுத்துக்கள் சென்ற வழியெங்கும் போய் அவளைத் தேடி அலைந்து கொண்டே இருந்தது.

' இங்க பாரு..ஊருக்குப் போறப்ப எதுக்கு அழறே? எதுவும் யோசிக்காத..நான் உனக்குத்தான்.. உனக்குத்தான்.. உனக்குத்தான்.. உனக்கு இல்லன்னா வேற யாருக்கும் இல்ல..ப்ச்..எனக்கே கூட இல்ல..என்னைய நம்பு.. எப்பவும் சந்தோஷமா இரு..வீட்டு வேலயெல்லாம் கத்துக்கோ..சரியா?..ஊருக்குப் போன உடனே ஃபோன் பண்றேன்.. '

        அவள் அழைக்கப்படும் குரலொன்றுக்காக மட்டும் நெடுநாட்கள் காத்திருந்தாள். முன்னர் அவள் எழுதிவந்த இதழ்கள், பத்திரிகைகள், இன்னும் சில புது இதழ்கள் எல்லாம் தங்கள் புதிய பக்கங்களை அழகுபடுத்தவென அவளது படைப்புக்களைத் தருமாறு மின்னஞ்சல் வழி கேட்டுக்கொண்டே இருந்தன. அவள் அவ்வேண்டுகோள்களை இறந்துபோய்ப் புழுத்த எலியை அப்புறப்படுத்துவது போன்ற அறுவெறுப்போடும் அலட்சியத்தோடும் குப்பைக்கூடைக்குள் கொட்டியபடி இருந்தாள். முடியாப்பட்சத்தில் மின்னஞ்சல் முகவரியை வேறு பெயரில் மாற்றிக்கொண்டாள். அதையுமொரு நெருங்கிய சினேகிதி மோப்பம் பிடித்துக் கண்டுபிடித்து 'எப்படியிருக்கிறாய் ?' என வினவியபோது அதிர்ந்தாள்.

         அன்பான நண்பர்களை இழக்கவும் முடியாது. திரும்பவும் எழுத்துக்களின் கைப்பிடித்து நடக்கவும் முடியாது. தோழிக்கு நலமெனப் பொய்யாகப் பதிலனுப்பினாள். பின்னர் யாரும் அறியாமல் முற்றாக இருள் சூழ்ந்த வெளியொன்றில் தொலைந்துபோவதெப்படி எனச் சிந்திக்கத் தொடங்கினாள். பதில் தெரியாச் சிந்தனை அவளைச் சூழ இருந்த புகழெனும் மாயவலையில் சிக்கித் தொங்கியது. விடுவிக்கமுடியாமல் வருந்தினாள். நகரும் எல்லாப் பாதைகளும் யாராலோ கண்காணிக்கப்படுவதுபோலப் பயந்து அவள் தன் பாதங்களை ஒருவித யோசனையோடே எப்பொழுதும் எடுத்துவைத்தாள்.

        தோழியின் மூலமோ, எப்படியோ அவளது மின்னஞ்சலை அறிந்துகொண்ட ஒரு சிற்றிதழ், அவளது கவிதைபாடல் குறித்தான ஒரு நேர்காணலை அவளிடமிருந்து பெறவிரும்பி மடலிட்டுக் கேட்டது. அச் சிற்றிதழ்தான் அவளை உலகுக்கு முதன்முதல் வெளிக்காட்டியது. அவளுக்கென்று வாசகர்களை உருவாக்கியது. அவளது எழுத்துக்களின் மீதான முதல் வெளிச்சத்தை அவ்விதழே எட்டுத் திக்கிலும் ஒளிரச் செய்தது. இவ் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் அவள் தவித்தாள். பின்னர் வேறு வழியற்று ஓர்நாள் ஏற்றுக்கொண்டாள்.

        தனக்கான கேள்விகளை விடுவிப்பவர் குரல்வளையிலிருந்து தனக்குத் தெரிந்தவைகள், இக்கட்டில் மாட்டிடாதவைகள், நல்லவைகள், சுயமும், இருப்பும், எழுத்தும், காதலும், ஆழ்மௌனமும் குறித்த சந்தேகங்களைக் கொண்டிராதவைகள் மட்டுமே வெளியே வரவேண்டுமென அவள் மனதுக்குள் பிரார்த்தித்தபடி இருந்தாள். அவளுக்குத் தெரியும். ஒரு கலைஞரிடம் மேற்கூறியவை தொடர்பான கேள்விகள் தவிர்த்து வேறெதுவும் வந்து கைகுலுக்காதென அவளுக்கு நன்றாகவே தெரியும். எனினும் பிரார்த்தித்துக் கொண்டாள்.

        பல கேள்விகள் அவளைச் சூழ்ந்தன. புகழ் வலையின் துளைக்கொன்றாக வந்து அவளைச் சேர்ந்தன. அவள் பயம் உதறி, உறுதியைப் போர்த்திக்கொண்டாள். வராத புன்னகையை இழுத்தெடுத்து இதழ்களில் சூடிக்கொண்டாள். ஒரு கவிஞருக்குரிய மென்மனதையும், அப்பொழுது தனக்கிருந்த படபடப்பையும் காட்டிக்கொள்ளாவண்ணம் அவள் தனது மொழியினை உதிர்க்கத் தொடங்கினாள். எல்லாக் கேள்விகளுக்கும் உண்மையைப் பதிலாகச் சொன்னாள். அவளது காதல் குறித்த கேள்வியின் போது மட்டும் பதிலெதுவும் சொல்லாமல் கேள்வியை அந்தரத்தில் நழுவவிட்டு அடுத்த கேள்வியின் முனையைப் பற்றிக்கொண்டாள்.

        அவளே எதிர்பாராத வண்ணம் இறுதிக்கேள்வி இலகுவாக இருந்தது. அவளுக்குப் பிடித்த பறவை என்னவென்றும் ஏனதனைப் பிடித்திருக்கிறதென்றும் அக் கேள்வி அவளை வந்து சேர்ந்தது. அவள் சிறிதும் யோசிக்கவில்லை. முன்னைய கேள்விகளுக்குப் பதிலளிக்க, யோசிக்க எடுத்துக்கொண்ட நேரத்தைக் கூட அவள் இதற்காக எடுத்துக்கொள்ளவில்லை. அக் கேள்வி அவளது உள்ளங்கையில் வந்து உட்கார்ந்து கொண்டதைப் போல, அவள் ஒரு கணம் தன் கைகளைப் பார்த்துக் கொண்டாள். விழிகளில் துளிர்த்த நீரினை எச்சிலோடு விழுங்கிக் கொண்டாள். உதடுகளை நாவால் ஈரலிக்கச் செய்து பின்னர் ஒரு புன்னகையோடும் உறுதியான, நேர்பார்வையோடும் பதிலளித்தாள்.

        '' எனக்கு லவ்பேர்ட்ஸ் பிடிக்கும். அவை எப்பொழுதும் காதல் செய்துகொண்டே சோடியாக வாழும் காதல் பறவைகள். எவ்வளவு மூப்பெய்தினாலும் ஒன்றையொன்று பிரியாது, ஒருபோதும் நம்பிக்கைத் துரோகம் செய்யாது, உண்மையாகக் காதலித்துக் கொண்டே இருக்கும். தமக்கிடையே புதிதாக ஒருவர் நுழைந்தாலும் துரத்தியடிக்கும். காதலுக்கெனச் சண்டையிடும். இறுதிவரை போராடும். காதலுக்காகவே இறந்தும் விடும். முக்கியமாக ஆண் பறவை மட்டும் அவ்வளவு நாளும் கூடி வாழ்ந்த துணையை விட்டுவிட்டு ஊருக்குப் போய் அம்மா,அப்பா சொன்னார்களென அன்பான காதலியைக் கைவிட்டு வேறொரு இணையைத் தேடிக்கொண்டு முன்னைய காதலிக்கு 'என்னை மறந்துவிடு' என மெயிலனுப்பாது. "

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி
# விகடன்
# தமிழ்மன்றம்
# தமிழ் எழுத்தாளர்கள்
# ஓவியர் ஸ்யாம்

Thursday, January 7, 2010

தூண்டில்



        நித்தியின் வேலைகளில் எப்பொழுதுமொரு அவசரமிருக்கும். அவன் எங்களை விடவும் இளையவன். இங்கு எங்களை என்று சொன்னது என்னையும் சின்னுவையும் சேர்த்துத்தான். நித்திக்கு அப்பொழுது பத்து, பதினோரு வயதிருக்கும். எங்களூரின் வண்ணான்காரத் தெருப்பையன். கறுத்துப் போய், துறுதுறுவென இருப்பான். பேச்சும்கூட அப்படித்தான். எனக்கும் சின்னுவுக்கும் ஒரே வயது. அந்தப் பதினாறு வயதுக்கு நான் படிப்பைப் பாதியில் விட்டு எனது அப்பாவின் கடையில் அண்ணனுடன் சேர்ந்து அவருக்கு உதவியாக வேலை செய்துகொண்டிருந்தேன். சின்னுவுக்குக் குறையேதுமில்லை. வசதியான வீட்டுப் பையன். பத்தாம் வகுப்புப் பரீட்சை எழுதிவிட்டு என்னுடன் சேர்ந்து மாலைவேளைகளில் ஊர் சுற்றிக் கொண்டிருந்தான்.

        சின்னுவும் என் வீட்டிலிருந்த நேரம், கழுவித் தோய்த்த துணிகளை என் வீட்டுக்குக் கொண்டு தர வந்திருந்த நித்திதான் எங்களிருவரையும் தனியே அழைத்து மிக ரகசியமாக அந்த யோசனையை முதலில் சொன்னான். அவர்கள் துணி துவைக்கும் குளத்துக்கருகில் இன்னுமொரு சிறு குளம் இருப்பதாகவும் அதில் பெரிய பெரிய விரால் மீன்கள் நிறையப் பிடித்துவரலாம் என்றும் அவனோடு வரும்படியும் சொன்னான். 'நீர் மட்டம் கெண்டைக்கால் அளவுதான் இருக்கும், வலை, தூண்டில் எதுவும் தேவையில்லை, மீன்களைக் கைகளாலேயே பிடிக்கலாம்' என அவன் சொன்னபோதே சுதாகரித்திருக்க வேண்டாமோ? அதைச் செய்யத் தவறிவிட்டோம். சரியென நாங்கள் இருவரும் மீன் பிடித்துவர அவனுடன் கிளம்பிவிட்டோம். இது நடக்கும்போது காலை ஆறுமணி இருக்கும். ஒரு மணித்தியாலத்துக்குள் மீன்களைப் பிடித்து எடுத்துவந்து வீட்டில் கொடுத்துவிட்டு, குளித்துக் கடைக்கு எட்டுமணிக்குக்  கிளம்பச் சரியாக இருக்குமெனத் திட்டமிட்டுக்கொண்டேன். கடற்கரைக்குப் போய் மீன் வாங்கிவருவதாக வீட்டில் சொல்லிவிட்டு நடந்தோம்.

        இங்கு நித்தியைப் பற்றிச் சொல்லவேண்டும். கொக்கரித்துக் கொண்டே முட்டை அடைகாக்கும் பெட்டைக் கோழி போல நித்தியின் அம்மா எப்பொழுதும் யாருடனாவது சண்டை போட்டுக் கொண்டே இருப்பார். சண்டை போடாவிட்டால் அவருக்கு உண்ட சோறு செரிக்காது, நிம்மதியாகத் தூக்கம் வராது என நினைக்கிறேன். நித்தியின் அப்பாவும் அம்மாவும் பொழுதுபோக்கு போல எப்பொழுதும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பதனால் இருவரும் சேர்ந்து ஒற்றுமையாக ஒன்றாக எங்காவது செல்வதைக் காண்பின் உலக அதிசயத்தைப் பார்ப்பதுபோல ஊர்மக்கள் பார்த்திருப்பர். ஊருக்குள் நித்தியைப் பற்றி ஒரு கதை உண்டு.

        ஒரு முறை நித்தியின் அப்பா, காலையிலேயே அம்மாவுடன் சண்டைபோட்டுக் கொண்டு, ஐந்து வயதான நித்தியையும் கூட்டிக் கொண்டு அருகிலிருந்த காட்டுக்கு விறகு தேடி எடுத்துவரப் போயிருக்கிறார். காட்டுக்குள் போகும் வழியிலெல்லாம் ஒவ்வொன்றையும் காட்டிக் காட்டி 'அது என்ன?' ,'இது என்ன?' என்று அப்பாவைக் கேட்டுக் கொண்டே வந்திருக்கிறான் நித்தி. அப்பாவும் சளைக்காமல் பதில் சொல்லிக் கொண்டே காட்டு மரங்களையும் சுள்ளிகளையும் சேகரித்துக் கொண்டுவந்து ஆற்றங்கரையோரம் அடுக்கிவைத்திருக்கிறார். வேலைக் களைப்பும் வெயிலும் அவருக்குள் எரிச்சலை மூட்டியிருக்க விறகுகளை அடுக்கிவிட்டு நித்தியை அந்த விறகுகளுக்குக் காவல் வைத்துவிட்டு அவர் திரும்பவும் காட்டுக்குள் போகப்பார்க்கையில்,

    'அப்பா இது என்ன?' என்று கேட்டிருக்கிறான் நித்தி ஆற்றைக் காட்டி.

    ' இது ஆறு'

    'இந்தத் தண்ணியெல்லாம் எங்க போகுது?'

    'ம்ம்..உன் அம்மாவோட வீட்டுக்குப் போகுது..வேலையைப் பார்க்க விடுறியா?' என்று எரிந்து விழுந்துவிட்டு அவர் காட்டுக்குள் போயிருக்கிறார்.

    அப்பா திரும்பி வந்து பார்க்க ஒரு விறகுத் துண்டையும் காணவில்லை. நித்தி மட்டும் நின்று கொண்டிருந்திருக்கிறான்.

    'எங்கேயடா விறகெல்லாம்?'

    'அம்மா இந்நேரம் எடுத்திருப்பா. இந்தத் தண்ணியெல்லாம் வீட்டுக்குத்தானே போகுது. அதனால எல்லாத்தையும் தண்ணிக்குள்ள போட்டுட்டேன்' என்றானாம்.

        அப்படிப்பட்ட நித்தி சொன்ன சிறிய குளம் ஊரைவிட்டும் சற்றுத்தள்ளி சிறிது தொலைவில் இருந்தது. மக்கள் அவசரத்துக்கு ஒதுங்குமிடம் போல இருந்த முற்காட்டுக்கு நடுவே இருந்தது. சுற்றிவரச் சாக்கடையோடு கோழி முட்டை வடிவத்தில் பரந்திருந்த அதில் பெரிய விரால் மீன்கள் நீந்துவது கரையிலிருந்தே தெரிந்ததுதான். ஆனால் நீர்மட்டம்தான் அதிகம். முழங்கால் வரையாவது இருக்கும். நீர்ப்பரப்பும் அகன்றது. அதற்குள் இறங்கி கைகளால் மீன்பிடிப்பது சாத்தியமில்லை என்பது நீருக்குள் இறங்கிய பின்னர்தான் தெரிந்தது. தெளிந்த நீர்தான். ஆனால் கால்வைத்தவுடன் சேற்றுக்குள் புதைந்து, முற்றாகக் கலங்கியது நீர். முழங்கால் வரை மடித்துக் கட்டியிருந்த வெள்ளைச் சாறனில் சேற்று நிறம் படியத் தொடங்கியது.

        சட்டைகளைக் கழற்றி கரைக்கு எறிந்துவிட்டு, நீண்ட நேரமாக அந்த நாற்றம் பிடித்த அழுக்கு நீருக்குள் நீந்தி நீந்தி மீன்களைக் கைகளால் பிடிக்கமுயற்சித்தோம். அவை எங்களுக்குப் போக்குக் காட்டி ஏமாற்றிக் கொண்டே இருந்தன. மீண்டும் நித்திதான் இன்னுமொரு யோசனையைச் சொன்னான். தண்ணீரையெல்லாம் கரைக்கு இரைத்து வற்றச் செய்தால் நீர் மட்டம் குறைந்து இலகுவாக மீன்களைப் பிடிக்கலாம் எனச் சொல்லியபடியே கரைக்கு ஏறி குளத்துக்கு அருகிலிருந்த ஒரு வீட்டில் போய் வாளிகள் இரண்டை வாங்கிவந்தான். அதிலொன்று ஓட்டை. 'மீனும் வேண்டாம், ஒரு மண்ணும் வேண்டாம்' என நான் வீட்டுக்குப் போயிருக்கவேண்டும். மீண்டும் அதைச் செய்யத் தவறிவிட்டேன்.

        மூவருமாக நீண்ட நேரத்துக்கு நீரை இரைத்துப் பார்த்தோம். அகன்ற குளத்தில் நீர் மட்டம் குறைவதாக இல்லை. கடும் வெயில் வேறு ஏறத் தொடங்கியிருந்தது. மூவருக்கும் பசியும், களைப்பும் வேறு. 'சரி..இன்னுமொரு நாளுக்குப் பார்ப்போம். இப்பொழுது வீட்டுக்குப் போவோம்' என நான் சொன்னதை சின்னு ஏற்றுக்கொள்ளவில்லை. முன் வைத்த காலை, பின் வைத்த மீனை எனப் பழமொழிகளெல்லாம் சொல்லி அடுத்த முயற்சி பற்றி யோசிக்கத் தொடங்கினான். இம் முறை நித்தி எதுவும் சொல்லவில்லை. ஆனால் ஏதோ கொடிய மிருகமொன்று அவனைத் துரத்துவது போல தண்ணீருக்குள்ளிருந்து எழுந்து கரைக்கு ஓடினான். பின்னர் அப்படியே ஈரத்தோடு அவனது வீடிருந்த திசையில் ஓடினான். நாங்கள் இருவரும் செய்வதறியாது தண்ணீருக்குள் நின்று பார்த்திருந்தோம்.

        சொற்ப நேரத்தில் அவன் மூச்சிறைக்க ஓடி வந்தான். இப்பொழுது அவனது கைகளில் ஒரு சேலை இருந்தது. அதன் ஒரு முனையின் இரு மூலைகளை விரித்து எனக்குப் பிடித்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, மறு முனையின் இரு மூலைகளையும் அவன் பிடித்துக் கொண்டான். அச் சேலையை நீருக்குள் போட்டு உயர்த்தும்பொழுது சேற்று நீர் அதனூடாக வடிந்து, சேறு மட்டும் திட்டுத்திட்டாய் சேலையில் எஞ்சியது. தண்ணீருக்குள் நாங்கள் சேலையை விரித்துப் பிடித்துக் கொண்டு சின்னுவை அதை நோக்கி மீன்களை விரட்டும்படி ஏவினோம். அவனும் மாடு மேய்ப்பவன் போலச் சத்தமிட்டுக்கொண்டே தண்ணீருக்குள் அதிர்வுகளைக் கிளப்பி விரட்டிக் கொண்டிருந்தான். இருந்த எல்லாச் சோர்வும், பிடித்த முதல் மீனோடு போயிற்று. அது ஒரு அடி நீளமான பெரிய மீன். பல மணித்தியாலச் சிரமத்திற்குப் பிறகு பல மீன்களைப் பிடித்திருந்தோம்.

        எல்லா மீன்களுமே அங்கிருந்த அழுக்குகளைத் தின்று செழித்து வளர்ந்திருந்தன. மீன்களைப் பிடித்து முடித்து கரைக்கு வந்து அவற்றை மூவரும் சமமாகப் பங்கிட்டுக் கொண்டோம். ஒற்றைப்படையாக எஞ்சியிருந்த சின்ன மீனொன்றை நித்திக்குக் கொடுத்துவிட்டோம். அவன் மீன்களையெல்லாம் தான் கொண்டுவந்த சேலையில் சுற்றியபடி, வாளிகளோடு ஈரம் சொட்டச் சொட்டத் தன் வீட்டுக்குப் போய்விட்டான். எங்களிருவருக்கும்தான் பெரும் சிக்கலொன்றிருந்தது. உடுத்து வந்திருந்த வெள்ளை சாரன்கள் ஈரமாகி, திட்டுத் திட்டாய் சேறு படிந்திருந்தது. அப்படியே வீதிவழியே போக வேண்டியிருக்கும். அத்துடன் மீன்களை எடுத்துப் போக எதுவுமில்லை எங்களிடம். வேறு வழியின்றி கரையில் கழற்றிப் போட்டிருந்த எங்கள் பனியன்களால் உடலையும், தலையையும் இயன்றவரை துடைத்துப் பின் அவற்றிலேயே அம் மீன்களைச் சுற்றியெடுத்து, சட்டையை மட்டும் போட்டுக் கொண்டு காண்போரெல்லாம் விசித்திரமாகப் பார்க்க எங்கள் வீடுகளுக்கு நடக்கத் தொடங்கினோம்.

        போகும் வழியில் நித்தியின் வீட்டைக் கடக்கும்போது அந்த வீட்டிலிருந்து நித்தியின் கதறல் வெளியே கேட்டது. அவனது அம்மா அவனுக்கு ஒரு புளியமர விளாறால் அடித்துத் துவைத்துக் கொண்டிருந்தார். சலவைக்காரி என்பதால் அடிப்பதுவும் துவைப்பது போலத்தான் இருந்திருக்கும். அவனது தங்கை வாசலில் நின்றுகொண்டு மூக்கு வழிய வழிய சத்தமாக அழுதுகொண்டிருந்தது. மீன்கள் சுற்றப்பட்ட சேலை அப்படியே மீன்களோடு வெளியே வீசப்பட்டுக் கிடந்தது. ஒரு கணம் நின்று பார்த்ததில் சலவைக்கு வந்திருந்த புதுச் சேலையொன்றை நித்தி மீன்பிடிக்க எடுத்து வந்திருந்தது புரிந்தது. அங்கிருந்தால் நமக்கும் அடிவிழுமென ஓட்டமும் நடையுமாக வீட்டுக்கு நடந்தோம். நேரம் மதியப் பொழுதைக் கடந்திருந்தது. அங்கிருந்து முதல் சந்தி தாண்டினால் பூரணம் அக்கா வீடு.

        எங்கள் ஊருக்கு முதன்முதல் போலிஸ் வந்தது பூரணம் அக்கா வீட்டுக்குத்தான் என அம்மா சொல்லியிருக்கிறார். அப்பொழுது எனக்கு மூன்று வயதிருக்குமாம். ஒரு காலைப் பொழுதில் ஊருக்குப் புதிதாக வந்திருந்த பூரணம் அக்காவையும் அவரது கணவரையும் கைது செய்யவெனப் போலிஸ் வந்து ஜீப்போடு அவர்கள் வீட்டு வாசலில் நின்றிருந்ததாம். ஊர் மக்களெல்லாம் திரண்டுபோய் ஒரு வித பயத்தோடு காக்கிச் சட்டைக்காரர்களையும், ஜீப் வண்டியையும், ஒப்பாரியோடு பயந்து அழும் பூரணம் அக்காவையும் பார்த்திருந்தார்களாம். பூரணம் அக்காவுக்கு மேல் உதடு மூக்குவரை பிளந்திருக்கும். இரு உதடுகளையும் மூடிப் புன்னகைப்பது அவரால் இயலாது. பேச்சும் கொன்னையாக இருக்கும். 'சாப்பிட வா' என்பதனை 'ஞாந்நின வா' என்பார். அவருடன் பல ஆண்டுகளாகப் பேசிப் பழகியவர்களுக்கே அவரது மொழியைப் புரிந்துகொள்ளல் இலகு. ஆனால் எப்பொழுதும் சிரித்த முகம். அன்று அழுதபடியே இருந்தாராம். அவரது கணவன் அநியாயத்துக்கு ஒல்லியான மனிதன். உயர்ந்து வளர்ந்தவருக்கு ஒரு காலில் ஊனம். முழங்காலை ஒரு கையால் தாங்கித் தாங்கி நடப்பார். மிகக் கம்பீரமான குரல் அவருடையதாக இருந்தது. ஒரு அரசாங்க அலுவலகத்தில் ஏதோ வேலை பார்த்து வந்தார்.

        அவர்களிருவருக்கும் ஒரு பெண் குழந்தை இருந்தது. அப்பொழுது அதற்கு ஒரு வயதுதான் இருக்கும். அவர்களிருவரும் எங்கள் ஊருக்கு வரும்போது அவர்களுடன் கூடவே வந்த அந்தக் குழந்தை அவர்களுடையதல்ல என்றும், அவர்கள் அதைக் கடத்திக் கொண்டுவந்திருப்பதாகவும் போலிஸ் சந்தேகித்து வாசலில் வந்து நின்றிருந்தது. அந்தக் குழந்தை அவ்வளவு அழகு. நல்ல சிவப்பு நிறம். அழகிய சுருண்ட தலைமயிர். அவர்களிருவரது சாயலும் அதனிடம் கிஞ்சித்தேனும் இல்லை. அப்படியே அழகிய குழந்தை பொம்மையொன்றுக்கு உயிர் கொடுத்து நடமாடவிட்டதைப் போல அழகுக் குழந்தை அது. அம் மூவரையும் அள்ளிப் போட்டுக்கொண்டு காவல் நிலையத்துக்கு ஜீப்பில் கூட்டிப் போனார்கள். மாலை பஸ்ஸில் அம் மூவரும் சந்தோஷத்தோடு திரும்பி வந்தார்கள். பஸ்ஸிலிருந்து இறங்கி ஊருக்குள் நடந்துவந்த வழியெங்கும் பூரணம் அக்கா அந்தக் குழந்தையைக் கொஞ்சிக் கொண்டே வந்தார். பூரணம் அக்காவின் கணவருக்குப் பிடிக்காத எவனோ ஒருவன் போலிஸுக்கு தவறான தகவல் வழங்கியிருக்கிறான் என்றார்கள்.

        இப்பொழுது பிரச்சினை என்னவென்றால் நாங்களிருவரும் உடுத்துப் போன வெள்ளைச் சாறன், வெள்ளைச் சட்டை முழுக்க நாற்றம் பிடித்த சேறு அப்பியிருக்க இந்த அசிங்கமான நிலையில் மீன்களைத் தூக்கிக்கொண்டு பூரணம் அக்கா வீட்டினைத் தாண்டிச் செல்லவேண்டும். எப்பொழுதும் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து தைத்துக் கொண்டிருக்கும் பூரணம் அக்காவின் கண்களில் ஒன்று தைக்கும் புடைவையில் இருக்கும், மற்றது தெருவில் இருக்கும். அவர் கண்டால் கூடப் பரவாயில்லை. அவரது அழகு மகள் கலைச்செல்வி பார்த்துவிட்டால் எங்களைப் பற்றி என்ன நினைப்பாள்? காலையும், மாலையும், இன்னும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவள் பள்ளிக்கு, வகுப்புகளுக்கு போகும்போதும் வரும்போதும் சைக்கிள்களில் பின்னாலேயே போய் காவல் காத்துத் திரியும் எங்கள் மேல் அவள் வைத்திருக்கும் மதிப்பும் மரியாதையும் (அப்படியொன்றிருந்தால்?! ) சரியும்தானே. அவள் எங்களைக் காணக் கூடாதென்று மனதுக்குள் வேண்டியபடி விறுவிறென்று நடந்தோம்.

        சின்னு வழியிலேயே அவன் வீட்டுக்குப் போய்விட்டான். நான் அவர்கள் வீட்டையும் தாண்டி இன்னும் ஒரு தெரு நடக்கவேண்டும். அந்தப் பின் மதிய வெயிலில் பலத்த பசியோடு வீட்டுக்குப் போய் பின்வாசல் வழியே நுழைந்தேன். எல்லோரும் சாப்பிட்டுத் தூக்கத்திலிருப்பார்கள் என்ற நம்பிக்கையோடு திருட்டுப் பூனை போல மெதுவாக பின்வாசல் கதவைத் திறந்தால் அம்மாவும், தங்கையும் தூங்காமல் அப்பொழுதுதான் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். 'நாற்றம் நாற்றம்... வெளியே போய்க் குளிச்சுக்கொண்டு வா சனியனே' எனச் சத்தம் போடத் தொடங்கினார்கள். நான் மீன்களைச் சமையலறையில் வைத்துவிட்டு எதுவும் பேசாமல் நல்லபிள்ளை போல கிணற்றடிக்குப் போய் இரண்டு வாளித் தண்ணீரள்ளி தலையிலிருந்து கால்வரை ஊற்றிக் கொண்டு, கொடியில் காய்ந்துகொண்டிருந்த கழுவிய ஆடைகளை அணிந்து உள்ளே வந்தேன். இல்லாவிட்டால் சாப்பாடு கிடைக்காது எனப் பயந்தேன். அம்மா சாப்பிட்டு முடித்து எனக்குச் சோறு போட்டுத் தந்தார். பின்னர் எழுந்துபோய் பனியனில் சுற்றியிருந்த அந்த மீன்களை கைபடாமல் ஒரு சிறு விறகுக்குச்சியால் திறந்து பார்த்தார். மிகவும் புளித்த மாங்காயை, கூசும் பற்களால் கடித்ததுபோல அறுவெறுப்போடு அஷ்டகோணலாகியது அவரது முகம். 'இதுதான் கடல் மீனா? உடல் முழுக்கச் சொரி பிடித்த மீன்கள். தூக்கியெறி இதை. இரு அப்பா வரட்டும். உனக்கு இருக்கு நல்லா' எனச் சத்தம் போட்டார்.

        சத்தம் கேட்டு உள்ளே உறங்கிக் கொண்டிருந்த அண்ணி எழுந்து வந்தார். தம்பி ஏன் இன்று கடைக்கு வரவில்லையென்று அண்ணா மதியச் சாப்பாட்டுக்கு வந்த வேளை கோபமாகக் கேட்டதாகச் சொன்னார். அவரும் போய் மீன்களைப் பார்த்து தன் பங்குக்கு முகத்தைச் சுழித்தார். அப்பாவும் அண்ணாவும் வந்தால் இன்று எனக்கு 'நல்ல' அறிவுரை கிடைக்குமென்பதை நினைத்து ஏதேதோ உளறிக் கொண்டிருந்தேன். மீன் வாங்கி வரக் கடற்கரைக்குத்தான் போனதாகவும், மீனே கிடைக்கவில்லையாதலால், குளத்துக்கு மீன் பிடிக்கப் போனதாகவும் நான் சொன்ன பொய்யை வீட்டில் யாரும் ஒரு கடுகளவு கூட நம்பவில்லை. மீன் விற்கும் கடற்கரையில் மீன் கிடைக்கவில்லை எனப் பொய் சொன்னவன் உலகிலேயே முதன்முதலாக நானாகத்தான் இருக்கும் எனத் தங்கை சொன்னாள்.

        சாப்பிட்டு முடித்து அம்மா தூக்கியெறியச் சொன்ன மீன்களை ஒவ்வொன்றாக எடுத்து ஒரு பையில் போட்டுக் கொண்டேன். எவ்வளவு கஷ்டப்பட்டுப் பிடித்த மீன்கள். இவற்றைத் தூக்கியெறிய முடியுமா? இனி இதனைக் கொண்டுபோய் சின்னுவுக்காவது கொடுக்கவேண்டும். அவன் எடுத்துப் போனவற்றோடு போட்டு இதையும் சமைக்கட்டும். நன்றாக உடுத்துக் கொண்டு வாசனையெல்லாம் பூசி, சைக்கிளை எடுத்துக் கொண்டு அவன் வீட்டுக்குப் போனால் அவன் ஒரு பையில் மீன்களைப் போட்டுக்கொண்டு எனது வீட்டுக்கு வரத் தயாராக நின்று கொண்டிருந்தான். அவன் வீட்டிலும் ஏற்கவில்லையாம். இனி மீன்களை நித்திக்கும் கொண்டுபோய்க் கொடுக்கவியலாது. சேலையைப் பாழாக்கி நாங்கள் செய்த மீன் கொலைகளுக்காக அவன் அம்மா அந்தச் சேலையைத் துவைப்பதுபோல எங்களையும் துவைத்துவிடக் கூடும். இருவரும் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். அடுத்த தெருவில் ஒரு மெலிந்த சிறுவன் ஒரு டயரைக் குச்சியால் தள்ளியபடி வீதியில் விளையாடிக் கொண்டிருந்தான். அவனை யாரென்று தெரியவில்லை. நாங்களிருவரும் ஒருவரையொருவர் பார்த்து ஒரு முடிவுக்கு வந்தோம். அச் சிறுவனின் அருகில் போய் அவன் அப்பா தந்ததாகவும் அம்மாவிடம் கொடுத்துவிடும்படியும் சொல்லி, அம் மீன் நிரம்பிய பைகளை அவனிடம் கொடுத்து சைக்கிளில் ஏறிப் பறந்தோம்.

        இது நடந்து இரண்டு, மூன்று மாதங்களிருக்கும். எங்கள் கடை மூடப்பட்ட ஒரு விடுமுறை நாளில் சின்னு எனது வீட்டுக்கு வந்திருந்தான். நாங்கள் அந்த மாலைவேளையில் சைக்கிளை எடுத்துக் கொண்டு உலாத்தப்போனோம். அப்பொழுதுதான் எங்களூரில் வெற்றிலை பீடாக்கடை அறிமுகமாகியிருந்த காலமது. ஒரு பீடா போட்டால் உதடெல்லாம் சிவந்துபோய் ஏதோ சாதித்தது போல இரண்டு நாளைக்கு அப்படியே இருக்கும். பீடா சாப்பிட்டு, உதட்டைச் சிவக்கவைத்து, கலைச்செல்வியை நோட்டமிடப் போகலாம் என்ற யோசனையை பெருமையோடு சின்னுதான் சொன்னான். இப்பொழுதாவது நான் மறுத்திருக்கவேண்டாமா? சரியென பீடாக் கடைக்கு சைக்கிளை விட்டோம். பீடாக்களில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று சாதாரண வெற்றிலைக்குள் பாக்குச் சீவல், இன்னுமேதேதோ இனிப்பு வைத்துச் சுற்றியது. இதைச் சாப்பிட்டால் வெறுமனே வாய் சிவக்கும். சுவையாக இருக்கும். மற்றது போதை தருவது. மடித்த வெற்றிலைக்குள் ஏதேதோ பொடிப்பொடியாக இட்டு நிரப்பி போதையை அள்ளித்தருவது. விலையும் கூடுதலானது. சத்தியமாக நாங்கள் இருவரும் சாதாரண பீடா இரண்டுக்குக் காசுகொடுத்து சாதாரண பீடாதான் கேட்டோம். எங்களது கெட்டநேரம் பீடா விற்பவன் அப்பொழுது பார்த்துத் தன் சின்ன மகனைக் கடையில் விட்டு வீட்டுக்குள் போயிருந்தான். அச் சிறுவன் ஏற்கெனவே சுற்றிவைத்திருந்த சுருள்கள் இரண்டை எங்களுக்கு எடுத்துத் தந்தான். அவை போதை தருவன என்பதனை சாப்பிட்ட பின்னர்தான் அறிந்தோம்.

        வெற்றிலை சாப்பிடும்பொழுது ஊறும் சிவப்பு எச்சிலை துப்பிவிடுவது எனது வழக்கம். விழுங்கிவிடுவது சின்னுவின் வழக்கம். அந்த பீடாவை வாய்க்குள் இட்டு மென்று, உதடு சிவக்க ஆரம்பித்த கணம் நாங்கள் கலைச்செல்வி வீட்டுத் தெருவில் சைக்கிளில் போய்க் கொண்டிருந்தோம். பூரணம் அக்கா, வழமை போலத் தைத்துக் கொண்டிருந்தார். கலைச்செல்வி, தன் வீட்டுக் கொடியில் காய்ந்துகொண்டிருந்த ஆடைகளை எடுத்துக் கொண்டிருந்தாள். அவர்களிருவரோடு, அவ் வீடும் திடீரெனத் தலைகீழாய்ச் சுழலத் தொடங்கியது. தெருவில் யாருமே இல்லை. சின்னு சைக்கிளோடு பாதையின் அங்குமிங்கும் போய் சரியாக பூரணம் அக்கா வீட்டு வேலிக்குள் போய்க் கவிழ்ந்து விழுந்தான். நானும் தலைசுற்றிப் போய் சைக்கிளோடு தெருவில் விழுந்தேன். பூரணம் அக்காவும் கலைச்செல்வியும் பதைபதைத்துப் போய் எழுந்து ஓடி வந்தார்கள்.

        எங்களைச் சிரமப்பட்டு அவர்களிருவரும் அவர்களது வீட்டுக்குக் கூட்டிப் போனதை உணரமுடிந்தது. கூட்டிக்கொண்டு போய் உட்காரவைத்து இருவரதும் வாய் வழியே வழிந்த சிவப்பு எச்சிலையெல்லாம் துடைத்துவிட்டார் அக்கா. எனக்குச் சற்றுத் தெளிவு இருந்தது. சின்னுவுக்கு கிஞ்சித்தேனும் தெளிவு இல்லை. ஆழ்ந்த தூக்கத்திலிருப்பவன் போல கண்மூடி சரிந்துகொண்டிருந்தான். பிறகு எங்களிருவரையும் கிணற்றடிக்கு அழைத்துச் சென்று சலவைக் கல் மேல் உட்காரவைத்து இருவரதும் சட்டையைக் கழற்றி ஒரு எலுமிச்சம் பழத்தைப் பாதியாக வெட்டி இருவர் தலையிலும் சூடு பறக்கத் தேய்த்து வாளிவாளியாக நீரள்ளி ஊற்றினார் அக்கா. சின்னப் பையன்களை ஏமாற்றி போதைக்குப் பழக்குவதாக அந்த பீடாக்காரனைத் தனது கொன்னை மொழியால் திட்டியபடியே தலை துவட்டியும் விட்டார். சிறு குழந்தைகள் கையில் வைத்து ஆட்டும் கிலுகிலுப்பை போன்ற அவரது பேச்சால் சின்னுவுக்கும் கொஞ்சம் தெளிவு வந்தது. இதற்கிடையில் மகளிடம் எங்களிருவரதும் வீட்டுக்கு செய்தி சொல்லி அனுப்பிவிட்டிருந்தார். அக்கா, தன் மகள் மேல் மிகவும் அன்பு வைத்திருந்தார். மிகவும் செல்லமாக வளர்த்தவளை தனியே எங்கேயும் அனுப்பாதவர் அந்த மாலைவேளையில் அன்று எங்கள் வீடுகளுக்கு அனுப்பினார்.

        இருவர் வீடுகளிலிருந்தும் பதற்றத்தோடு ஆட்கள் ஓடி வந்தனர். சைக்கிள்களைப் பிறகு எடுக்கலாம் எனச் சொல்லி அவர்கள் அவரவர் வீடுகளுக்கு எங்களை அழைத்துச் சென்றனர். அதன் பிறகு வீட்டில் எல்லோராலும் எனக்குப் பெரிய அர்ச்சனைகள் நடந்திருக்கக் கூடும். எனக்கு எதுவும் தெரியவில்லை. அப்படியே தூங்கியவன் காலையில் தான் விழித்தேன். மயக்கம் முழுசாகத் தெளிந்திருந்தது எனினும் வாய்ச் சிவப்புப் போகவில்லை. தங்கை என்னைக் காணும்போதெல்லாம் விழுந்துவிழுந்து சிரித்தாள். இப்பொழுது சைக்கிளை எடுத்து வரப் போகவேண்டும். அங்கு போக ஒரு வித வெட்கமாக இருந்தது. எனினும் அப்பா வந்து சைக்கிள் இல்லாவிட்டால் என்னைப் போட்டு மிதிப்பாரோ எனப் பயந்து சைக்கிளை எடுத்துவரப் போனேன்.

        பூரணம் அக்கா தெருவில் என்னைக் கண்டதுமே முகம் முழுதும் சிரிப்போடு அன்பாக உள்ளே வரச் சொல்லி வீட்டினுள்ளே வைத்திருக்கும் சைக்கிளை எடுத்துப் போகச் சொன்னார். அக்காவும் அவரது கணவரும் மட்டும் வீட்டிலிருந்தார்கள். கலைச்செல்வி பள்ளிக்குப் போயிருந்தாள். வந்த நேரம் நல்லதாகப் போயிற்று. சைக்கிளை எடுத்துப் போனால் இனி இந்தத் தெருப்பக்கமே வரக் கூடாது. அவ்வளவு வெட்கக் கேடு என எண்ணிக் கொண்டேன். சைக்கிளின் கம்பிகள் வளைந்திருந்தன. அக்கா கணவர் அதைத் தட்டித் தட்டி நேராக்கிக் கொண்டிருந்தார். இதற்கிடையில் அக்கா தேனீர் ஊற்றித்தந்தார். மறுக்கமுடியாமல் வெட்கத்தோடு வாங்கிக் குடித்தேன். அழகான சிறிய வீடு. வீட்டின் ஒவ்வொரு பாகமும் படுசுத்தம். அக்கா ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார். எனக்கு எதுவுமே புரியவில்லை. புன்னகைத்துக் கொண்டே இருந்தேன். சின்னுவின் சைக்கிள் வீட்டினுள்ளே அப்படியே கிடந்தது. அவனின்னும் எடுத்துப் போக வந்திருக்கவில்லை.
       
        அன்று அந்தச் சைக்கிளை எடுத்துக் கொண்டு வந்தவன்தான். பிறகு நானும் சின்னுவும் அந்தத் தெருப்பக்கமே போகவில்லை. இரண்டு வருடங்கள் கழித்து பிறகொருநாள் ஒரு விடிகாலையில் அந்த அசம்பாவிதம் குறித்துக் கேள்விப்பட்டோம். நம்பமுடியாமல் நானும் சின்னுவும் உடனே சைக்கிள்களை எடுத்துக் கொண்டு பூரணம் அக்கா வீட்டுக்கருகே விரைந்தோம். தெருவில் எல்லோரும் பார்த்திருக்க பூரணம் அக்கா திண்ணையில் அமர்ந்து கொண்டு சத்தமாக அழுதுகொண்டிருந்தார். 'குடி கெடுக்க வந்தவளே....' என்று வீட்டுப் படலையருகே நின்றபடி மிகக் கொச்சையாகச் சத்தமிட்டுக் கத்திக் கொண்டிருந்த நித்தியின் அம்மாவை நாலுபேர் பின்னுக்கு இழுத்துக் கொண்டிருந்தனர். விட்டால் ஓடிப் போய் பூரணம் அக்காவை அடித்துவிடுவார் போலிருந்தது. அவருக்கருகே நித்தியும் தன் பங்குக்கு ஒரு அரிவாளைக் கையில் வைத்துக்கொண்டு சத்தம் போட்டுக்கொண்டிருந்தான். அவனையும் சிலர் முன்னேறவிடாமல் இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்தனர்.

        'இதுக்குத்தான் ஓடிப்போனவளோட மகளை எடுத்து வளர்க்காதேன்னு அன்னிக்கு படிச்சுப் படிச்சு சொன்னேன்..அம்மா புத்திதானே புள்ளைக்கும் வரும்..இப்ப பாரு..அவ இவ புருஷனோடு ஓடிப்போய்ட்டா.அவன் ரெண்டு புள்ளைக்கு அப்பா வேற' எனத் தன் கம்பீரமான குரலில் கத்தியபடி அவர் கணவர் தனது நன்றாக இருந்த காலால் அக்காவின் இடுப்பில் உதைத்துக் கொண்டிருந்தார். பதினைந்து வருடங்களுக்குப் பிறகு திரும்பவும் அந்த வீட்டுக்கு அன்று மதியம் போலிஸ் வந்தது.

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

நன்றி
# அநங்கம் மலேசிய தீவிர இலக்கிய இதழ் (டிசம்பர் 2009) - சிறுகதைச் சிறப்பிதழ் 

# திண்ணை