Friday, February 22, 2008

ஓடிப் போனவள்


சரோ வீட்டை விட்டு ஓடிப்போவதென்று முடிவெடுத்துவிட்டாள். அதில் எந்தவொரு மாற்றமுமில்லை. மனதில் அசாத்திய தைரியமொன்று குடிபுகுந்துவிட்டது. எதுவானாலும் வரட்டும்,பார்க்கலாமென்ற துணிச்சல் எங்கிருந்து வந்ததென அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது. இந்த வீட்டை விட்டுப் போவதென்றால் பகல் சரிப்பட்டு வராது.இரவுதான் சரி.

கல்யாணவேலைகள் வீட்டில் மும்முரமாக நடந்துகொண்டிருந்தன.இன்னும் ஒருவாரத்தில் கல்யாணத்தை வைத்துக்கொண்டு தானிப்படி வீட்டை விட்டு ஓடிப்போவதென்பது சரியான முடிவுதானா என அவள் சிறிதேனும் எண்ணிப்பார்க்கவில்லை.அவள் மனம் முழுவதும் குமார் நிறைந்திருந்தான்.அவள் மனதுக்குள் அவன் நடந்தான்.சிரித்தான்.கதைகள் பேசினான்.வேறெந்த எண்ணங்களும் அவளுக்கு வரவிடாமல் தடுத்தான்.

வீடு முழுதும் ஆட்கள் நிறைந்திருந்தார்கள்.நெருங்கிய சொந்தங்கள்,நண்பர்கள்,பக்கத்து வீட்டுக்காரர்களெனப் பலர் வீட்டை நிறைத்திருந்தார்கள்.கல்யாண வேலைகளுக்காகவென்று இல்லை.மற்ற நாட்களில் கூட இப்படித்தான்.ரமா அக்கா வகுப்புத் தோழிகள்,சுரேஷ் அண்ணாவுடைய நண்பர்களெனப் பலர் அடிக்கடி வீட்டுக்கு வந்து போய்க்கொண்டே இருப்பார்கள்.வீடும் எப்பொழுதும் கலகலவென்றிருக்கும்.வீட்டில் தேனீருக்கான வெந்நீர் நாள்முழுதும் கொதித்துக் கொண்டேயிருக்கும் இவள் மனதைப் போல.

மாப்பிள்ளை வீடும் இவர்களைப் போலவே பெரிய,வசதியான இடம்தான்.ராஜி அக்கா புருஷனின் சொந்தக்காரர் பையன்.பெண் பார்க்கவந்த அன்று இவள் பார்த்திருக்கிறாள்.அழகான,படித்த,நன்றாகச் சம்பாதிக்கிற பையன்.
முதல் பார்வையிலேயே அவர்களுக்குப் பெண்ணை மிகவும் பிடித்துப்போயிற்று. 'பொண்ணு ரொம்பக் குடுத்து வச்சவ' என்று சொந்தங்கள் பேசிக்கொண்டது இவள் காதிலும் விழுந்தது.ஆனால் இவளுக்குத்தான் இந்தக் கல்யாணத்தில் துளிக்கூட விருப்பமில்லை.வேண்டாவெறுப்பாகவே அத்தனை வேலைகளையும் செய்து வந்தாள்.

வீட்டாருக்கு எந்தச் சந்தேகமும் வந்துவிடக் கூடாதென்று எல்லோர் முன்பும் வளையவந்தாள். எந்தப் பதற்றத்தையும் காட்டிக்கொள்ளாமல் வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்தாள்.வேலைகள் சீக்கிரமாக முடிந்தால்தானே எல்லோரும் நேரகாலத்தோடு தூங்கப் போவார்கள்.தானும் ஓடிப்போகலாம்.

மழை இருட்டும் சேர்ந்து அந்தியைச் சீக்கிரம் இரவாக்கிவிட்டது.மழை பெய்யுமோ என்ற அச்சம் மனதில் பரவலாயிற்று. எது வந்தாலும் பார்க்கலாமென மனதுக்கு அவளே தைரியமூட்டிக்கொண்டாள்.தன்னோடு எதனையும் எடுத்துச் செல்லவில்லை. கையில் பையோடு நட்டநடு ராத்திரியில் வெளியில் இறங்குவது பார்ப்பவர்களுக்கு சந்தேகத்தை உண்டு பண்ணும்.

இரவானதும்,இருந்த அனைவரும் சாப்பிட்டு ஓயும்வரை காத்திருந்து, இரவுச்சாப்பாட்டை இவளும் சாப்பிட்டு முடித்தாள். அவளுக்கிருந்த பதற்றத்தில் பசியெடுக்கவில்லையென்றாலும் ரொம்பத் தூரம் பஸ்ஸில் போயாகவேண்டுமே. இதுவரை தனியாக எங்கும் போய்ப் பழக்கமில்லை.ராஜி அக்காவின் குழந்தையை பள்ளிக்கு விட்டுக் கூட்டிவருவதோடு சரி.கடைகளுக்குக் கூடத் தனியாகப் போனதில்லை. பள்ளியின் அருகிலேயே பஸ் நிறுத்துமிடம் இருப்பது தெரியும்.இங்கிருந்து ஐந்து நிமிட நடையில் போய்விடலாம்.

இருப்பதில் நல்ல ஆடையொன்றை அணிந்துகொண்டாள்.புத்தம்புது ஆடை கூடப் பார்ப்பவர்க்குச் சந்தேகத்தை ஏற்படுத்தும்.கையில் பொத்தி வைத்திருந்த கைக்குட்டையைப் பிரித்துப்பார்த்தாள். சுரேஷ் அண்ணா எப்பொழுதோ கொடுத்த நூறு ரூபாயும் பத்திரமாக இருந்தது. அங்கு போய்ச் சேர இப்பணம் போதுமானதாக இருக்க வேண்டுமென வேண்டிக்கொண்டாள்.

இவள் வருவதை குமார் கனவில் கூட எண்ணியிருக்கமாட்டான். ஏழைக் குடிசை இவளை எப்படி எதிர்கொள்ளப் போகிறது ? வரவேற்குமா ? இல்லை திரும்ப இங்கே அனுப்பிவைக்குமா? குமாருக்கும், தாய்க்கும் இவள் வரவு அதிர்ச்சியை அளிக்குமா? ஆனந்தமாயிருக்குமா? குமார் இவளைப் பார்த்ததும் எப்படி நடந்துகொள்வான் ? திரைப்படங்களில் போல் கண்டவுடன் ஓடி வந்து கட்டிக் கொள்வானா?

தூரத்து இடிமுழக்கம் சிந்தனை ஓட்டத்தை நிறுத்தியது. அறையை விட்டு மெதுவாக வெளியே வந்து பார்த்தாள்.அனைவரும் அவரவர் வேலைகளில் ஆழ்ந்திருந்தார்களே ஒழிய இவளைக் கண்காணிக்கும் நிலையில் யாருமில்லை.

காலில் செருப்பினை மாட்டிக்கொண்டாள்.பின் வாசலூடாக முற்றத்துக்கு வந்தாள்.இந்நேரத்தில் வாசல்கேட் மூடியிருக்கும். திறக்கமுடியும்.ஆனால் சத்தமெழுப்பும். மாட்டிக்கொள்வோம். அதனால் அவ்வழி வேண்டாமென முடிவெடுத்தாள். பழகிய இடமென்பதால் இருட்டு பரிச்சயமானது. கொல்லை வேலி இடுக்கினூடாக வீதிக்கு வந்தாள். சுற்றுமுற்றும் பார்த்தாள். யாருமில்லை. பஸ் நிறுத்தத்தை நோக்கி மெதுவாக நடக்கவாரம்பித்தாள்.

திடீரெனத் தனக்குப்பின்னால் சலசலப்புக் கேட்டது. தன்னை யாராவது பின் தொடர்கிறார்களோ என்ற ஐயம் தோன்றி உடல் நடுங்கத் திரும்பிப் பார்த்தாள்.வீட்டு நாய் பின்னாலேயே வந்துகொண்டிருந்தது. மனது ஆசுவாசமாக லேசாகப் புன்னகைத்துக் கொண்டாள்.அத்தனையையும் மௌனமாய் கருமேகத்துக்குள்ளிருந்து மெல்ல எட்டிப் பார்த்தபடி நிலவு ஊர்ந்து கொண்டிருக்க ,ஆந்தையின் அலறல் எங்கோ தூரத்தில் கேட்டது.

ஆந்தையின் அலறல் துர்ச்சகுனத்திற்கு அறிகுறி.அம்மா கதை,கதையாய்ச் சொன்னதெல்லாம் நினைவுக்கு வந்தது.அம்மாவின் நினைவு வந்தது.நாளைய நாளை அம்மா எப்படி எதிர்கொள்வாளோ ? இவள் மேல் கோபம் கொள்வாளா ? இல்லை.அம்மாவுக்கு இவள் மேல் பாசம் அதிகம்.இவள் நிலையை எடுத்துச் சொன்னால் புரிந்துகொள்வாள்.அக்கம் பக்கத்து வீடுகள் தான் " பொட்டப்புள்ளைய ஒழுங்கா கண்டிச்சு வளர்த்திருக்கணும்.இல்லேன்னா இப்படி இருக்கிற வீட்டை விட்டு ஓடிப்போக மனசு வருமா ?" எனப் பல கதைகள் பேசும்.எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான்.பின்னாட்களில் மறந்துவிடுவார்கள்.

காலையில் இவளைக் காணாமல் எல்லோரும் தேட ஆரம்பிப்பார்கள். அவர்களுக்கு இவள் இல்லாவிட்டால் வீட்டில் எந்தவேலையும் ஓடாது. கல்யாணவேலைகள் எல்லாம் அப்படியே நிற்கும். ஒழுங்காய்க் கவனிக்கவில்லையென ஆளுக்காள் குற்றம் சொல்லிக் கொள்வார்கள்.சிலவேளை பொலீஸில் கூட புகார் கொடுக்கக் கூடும்.

பரவாயில்லை. ஆனால் ராஜி அக்கா குழந்தைதான் பாவம்.எல்லாவற்றுக்கும் இவளிடமே பழகிவிட்டது. குளிப்பாட்டி , சாப்பாடு ஊட்டி , பாடம் சொல்லிக்கொடுப்பதிலிருந்து உறங்கும் வரை இவள் அரவணைப்பிலேயே வளரும் குழந்தையது.நாளையிலிருந்து அது தனிப்பட்டுப் போகுமோ ?

வெளியூருக்குப் போகும் கடைசி பஸ் இருப்பதைக் கவனித்தாள்.இதில் சென்று அநதக் கிராமத்துத் தேயிலைத்தோட்டம் கடந்து குடிசைப்பகுதியில் இறங்கிக் கொள்ளத்தெரியும்.கொஞ்சம் பதற்றம் நீங்கப் பெருமூச்சு விட்டுத் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டாள். பின்னால் வந்துகொண்டிருந்த நாயை வீடு நோக்கித் துரத்திவிட்டாள்.அது இவள் பஸ் ஏறும்வரை காத்திருந்து பார்த்து, வீடு நோக்கி நடக்க, பஸ் புறப்பட ஆரம்பித்தது.

****************************************************

" என்னைத் திரும்ப அங்கே போகச் சொல்லாதேம்மா. நான் மட்டும்தான் அங்க வேலைக்காரியா இருக்கேன்.ரொம்ப வேலை வாங்கறாங்க.எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கும்மா.அந்த வீட்டுச் சின்ன அக்காவுக்கு வர்ற கிழமை கல்யாணம் வேற இருக்கு. எல்லாவேலையும் நான் தான் செய்யவேண்டியிருக்கும்மா. தூங்கக் கூட நேரமில்ல.நான் இங்க இப்படியே தம்பி குமாரப் பார்த்துக்கிட்டு , உன் கூடவே கூலி வேலைக்கு வந்துக்கிட்டு இந்த வீட்டிலேயே இருக்கேன்மா. என்னை வீட்டை விட்டு அனுப்பிடாதேம்மா " எனக் குழந்தை குமாரைத் தூக்கி இடுப்பில் வைத்து, அம்மாவிடம் சொல்லி விம்மிக் கொண்டிருந்தாள் இரவு புறப்பட்ட பஸ்ஸில் தன் குடிசைக்குப் பத்திரமாக வந்துசேர்ந்த 12 வயது சரோ.


எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

6 comments:

Divya said...

வாவ்........கடைசி வரைக்கும், காதலினிடம் ஒடிப்போகிறாள் என்றே எண்ணத்தோன்றியது,

அட்டகாசமாக அந்த திரில்லை மெயிண்டேன் பண்ணியிருப்பது அபாரம்,

மிகவும் வியந்தேன்,

பிடித்துப்போனது எழுத்தின் நடை!!

மனமார்ந்த பாராட்டுக்கள்!!

M.Rishan Shareef said...

அன்பின் திவ்யா,

வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி சகோதரி :)

PPattian said...

இந்த முடிவை எதிர்பார்க்கவே இல்லை.. அருமையாக கதையை நகர்த்தி செல்கிறீர்கள்.. வாழ்த்துகள்.

M.Rishan Shareef said...

அன்பின் பட்டியன்,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா said...

sha!

Ewlo Supera Solli Irukkeenga?

Sinna wayathu welaikkariyai Kathalinnum Kumaarai Kathalannum Ninaithen.

Arumai!

M.Rishan Shareef said...

அன்பின் ரிஸ்னா,

//sha!

Ewlo Supera Solli Irukkeenga?

Sinna wayathu welaikkariyai Kathalinnum Kumaarai Kathalannum Ninaithen.

Arumai!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !